துப்பாக்கி முனையில் தொடர் கொள்ளை
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம், மயிலம் ஆகிய இடங்களில் துப்பாக்கி காட்டி தொடர் கொள்ளை,;
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் காமராஜ்நகர் பகுதியை சேர்ந்தவர் பிலவேந்திரன் ( 53). இவர் நேற்று இரவு தனது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். நள்ளிரவில் காரில் வந்த முகமூடி அணிந்த 4 பேர் கொண்ட கும்பல் துப்பாக்கி மற்றும் பயங்கர ஆயுதங்களை எடுத்துக்கொண்டு பிலவேந்திரன் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே சென்றது. கதவை உடைக்கும் சத்தம் கேட்டு பிலவேந்திரன் மற்றும் அவரது குடும்பத்தினர் திடுக்கிட்டு எழுந்தனர். பயங்கர ஆயுதங்களுடன் முகமூடி கும்பல் வீட்டுக்குள் வந்திருப்பதை கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
உடனே அவர்கள் திருடன்,திருடன் என அலறவே, அந்த கும்பல் துப்பாக்கியை காட்டி பிலவேந்திரன் குடும்பத்தினரை மிரட்டி அவர்கள் அணிந்திருந்த தங்க நகைகளை கழற்றி தருமாறு கூறியது அதற்கு பிலவேந்திரன் குடும்பத்தினர் மறுத்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த கும்பல் பிலவேந்திரன் மற்றும் அவரது மகன் அருண்குமார் (31) ஆகிய 2 பேரையும் பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக தாக்கி, அவர்களிடமிருந்து 2 சவரன் தங்க நகைகளை பறித்தது. வீட்டில் வேறு எதுவும் பொருட்கள் சிக்காததால் அந்த கும்பல் அங்கிருந்து காரில் தப்பி சென்றது.
அங்கிருந்து மயிலம் ஜக்காம்பேட்டை பகுதிக்கு காரில் சென்ற அந்த கும்பல், அந்த பகுதியில் குமார் (24) என்பவரின் வீட்டின் முன்னாள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக்கை திருடியது.
அதே பகுதியில் அரசு பள்ளி ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற வரதராஜ் என்பவரின் வீட்டிற்குள் புகுந்து, வீட்டில் இருந்த வரதராஜ் குடும்பத்தினரை துப்பாக்கியை காட்டி மிரட்டி அங்கிருந்த எல்.இ.டி. டி.வி.யை தூக்கி சென்றது.
பின்னர் அதே பகுதியில் உள்ள லோகநாதன் என்பவருக்கு சொந்தமான வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தது. அந்த வீட்டில் உள்ளவர்கள் வெளியூருக்கு சென்றிருந்தனர். அந்த வீட்டில் பொருட்கள் எதுவும் சிக்கவில்லை.
இதையடுத்து மயிலம் கண்ணிகாபுரம் மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள அ.தி.மு.க. கிளை செயலாளர் ஞானசேகரன் வீட்டிற்குள் அந்த கும்பல் சென்றது. அப்போது திடுக்கிட்டு எழுந்த ஞானசேகரன் மற்றும் அவரது குடும்பத்தினர் திருடன், திருடன் என்று சத்மிட்டனர்.இந்த சத்தம்கேட்டு அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் அங்கு ஓடிவந்தனர். பொதுமக்களை கண்டதும் அந்த முகமூடிகும்பலை சேர்ந்த 4 பேரும் அவர்கள் வந்த காரை அங்கே விட்டு விட்டு, அவர்கள் திருடி வந்த பைக்கில் தப்பி சென்றுவிட்டனர்.
இதுகுறித்து மயிலம், மற்றும் திண்டிவனம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.