சாதி பாகுபாடு பார்க்கும் ஊராட்சி செயலர்: ஆட்சியரிடம் புகார்
மயிலம் அருகே பெரியதச்சூர் ஊராட்சி செயலரின் பாகுபாட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தலித் மக்கள் ஆட்சியரிடம் கோரிக்கை.
வி'ழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், மயிலம் தொகுதிக்கு உட்பட்ட பெரியதச்சூர் கிராமத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் சட்ட புலிகள் பேரவை நிறுவன தலைவர் சத்தியராஜ் தலைமையில் இன்று திங்கட்கிழமை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு நாளில் கலந்து கொண்டு கோரிக்கை மனு கொடுத்தனர்,
அந்த மனுவில், பெரியதச்சூர் ஊராட்சியை சேர்ந்த 6 ,7 வார்டுகளில், பிரதம மந்திரி யோஜனா திட்டத்தின் கீழ் 56 வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஒதுக்கிய வீடுகள் அனைத்துமே ஊராட்சி செயலாளர் சிவரஞ்சனி உறவினர்களுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. மகாத்மாகாந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணிபுரியும் ஆதிதிராவிடர் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு ஒரு வாரத்திற்கு ரூ. 1400 வழங்க வேண்டிய இடத்தில் ரூ.700 மட்டும் வழங்கப்பட்டது. இதே பணியைச் செய்த மாற்று சமூகத்தினருக்கு ரூ.1400 வழங்கப்பட்டுள்ளது.
வருகைப் பதிவேடு பதிய ரூ.100ம் வீட்டிற்கான நிதியைப் பெற்றுத்தர ஒவ்வொரு முறையும் தலா ஆயிரம் ரூபாய் என வசூல் செய்கிறார். ஊராட்சி செயலாளருக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் வேலைக்கு வராமலேயே ஊதியம் வழங்கப்படுகிறது. அரசுக்கு சொந்தமான இடங்களை ஆக்கிரமிப்பு செய்து வைத்துள்ள இடங்களை கண்டறிந்து ஆக்கிரமிப்பு இடங்களை மீட்க முயற்சி செய்தால். ஆக்கிரமிப்பாளரிடம் கையூட்டு பெற்றுக்கொண்டு மீண்டும் ஆக்கிரமிப்பு செய்ய துணையாக உள்ளார்.
இப்போது கூட சர்வே எண். 94-ல் ஆக்கிரமிப்புக்களை அகற்றுவதற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் இதுவரை ஆக்கிரமிப்பை அகற்றவில்லை. இப்போது அரசுக்கு சொந்தமான இடத்தில் இந்திராணி என்பவர் பயிர் செய்யும் பணியை மேற்கொண்டுள்ளார். ஊராட்சி செயலாளர் சிவரஞ்சனி தந்தை 100 நாள் வேலைக்கு வரும் பெண்களை இழிவாகப் பேசுகிறார்.
எனவே சாதி ரீதியாக செயல்பட்டு வரும் ஊராட்சி செயலாளரை உடனடியாக துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் வலியுறுத்தி உள்ளனர்.
மேலும் ஊராட்சி செயலர் மாற்று சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், தற்போதைய தலைவர் தலித் சமூகத்தைச் சேர்ந்த கணேசனை உதாசீனம் செய்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது .