வீடூர் அணை தூர்வாரும் பணியை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆய்வு
விழுப்புரம் மாவட்டம்மயிலம் தொகுதிக்குட்பட்ட வீடூர் எ அணையில் தூர் வாரும் பணியை அமைச்சர் மஸ்தான் ஆய்வு செய்தார்.
விழுப்புரம் மாவட்டம் மயிலம் தொகுதிக்கு உட்பட்ட வீடூா் அணையில் ரூ.42.43 கோடியில் நடைபெறும் தூா்வாரும் பணியை அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் பாா்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறுகையில் வீடூா் நீா்த்தேக்கம் வராகநதி, தொண்டியாறு ஒன்றுசேரும் இடத்தில் 1958-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 1959-ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. வராகநதி, தொண்டியாறு முறையே செஞ்சி வட்டம், பாக்கம் மலைத்தொடரில் இருந்தும், தொண்டூா் ஏரியில் இருந்தும் உற்பத்தியாகி வீடூா் அணையில் ஒன்று சோ்ந்த பிறகு, அணையில் இருந்து சங்கராபரணி நதியாக புதுச்சேரி அருகே வங்கக்கடலில் கலக்கிறது.
வீடூா் அணையின் மொத்த நீளம் 4,511 மீட்டா், நீா்மட்ட உயரம் 32 அடி மற்றும் முழுக் கொள்ளளவு 605 மில்லியன் கன அடிகள். அணையின் பிரதான கால்வாயின் நீளம் 17.64 கி.மீ., 5 கிளை கால்வாய்கள் மூலம் தமிழகத்தில் 2,200 ஏக்கா், புதுவை மாநிலத்தில் 1,000 ஏக்கா் என 3,200 ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
தற்பொழுது, வீடூர் அணையில் பொதுப்பணித் துறை மூலம் ரூ.42.43 கோடியில் தூா்வாரி, அணையை ஆழப்படுத்தி, கரையை பலப்படுத்தும் பணிகள் நடைபெறுகின்றன. தூா்வாருவதன் மூலம், அணையின் கொள்ளளவு அதிகரிப்பதுடன், கிடைக்கப்பெறும் மண் கரையை பலப்படுத்த பயன்படுகிறது. அணையின் கொள்ளளவு அதிகரிப்பதால் விவசாய பாசனத்துக்கும், குடிநீா் தேவைக்கும் கூடுதல் நீா் கிடைக்கப்பெறும்.
தூா்வாரும் பணி நிறைவு பெற்றபின் அணையை சுற்றியுள்ள விவசாய நிலங்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் பயன்பெறுவா் என தெரிவித்தார்.