விழுப்புரம் அருகே 30 ஏக்கர் தைல மரங்கள் எரிந்து நாசம்

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள வீடுர் அணை அருகே 30 ஏக்கர் அளவில் தைல மரங்கள் எரிந்து நாசமாகின.;

Update: 2022-07-01 02:30 GMT

பைல் படம்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ளது வீடூர் அணை.இதன் மேற்கு பகுதியில் சுமார் 60 ஏக்கர் பரப்பளவில் தைலமரக்காடு உள்ளது. இதனை வனத்துறையினர் பராமரித்து வருகின்றனர்.

இந்த நிலையில் வியாழக்கிழமை மாலை 5.30 மணிக்கு தைலமரக்காட்டில் உள்ள மரங்கள் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. இது பற்றிய தகவல் அறிந்ததும் விக்கிரவாண்டி தீயணைப்பு நிலைய அலுவலர் சுந்தரேஸ்வரன் தலைமையிலான வீரர்கள் விஜயகுமார், வீராசாமி, மகேஷ் மற்றும் வீரர்கள் விரைந்து சென்று தண்ணிரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்க முயன்றனர். இருப்பினும் மரங்கள் அடர்த்தியாக இருந்ததால் தீ அனைத்து மரங்களுக்கும் பரவியது, இதனால் சுமார் 30 அடி உயரத்திற்கு தீ கொழுந்து விட்டு எரிய தொடங்கியது.

மேலும் காற்றும் அதிகமாக வீசியதால், தீயணைப்பு வீரர்களால் விரைந்து தீயை அணைக்க முடியவில்லை. இந்த நிலையில் இரவு 7.30 மணிக்கு சாரல் மழை பெய்தது. இதனால் தீயின் தாக்கம் குறைய தொடங்கியது. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் இரவு 9.30 மணிக்கு மேலாகவும் ஈடுபட்டு வந்தனர்.

இந்த தீவிபத்தில் 60 ஏக்கர் பரப்பிலான தைல மர வனப்பகுதியில் சுமார் 30 ஏக்கரில் இருந்த தைல மரங்கள் இன்று காலை வரை முற்றிலும் எரிந்து நாசமாகியது, இதன் மதிப்பு ரூ.5 லட்சம் வரை இருக்கும் என தெரிகின்றது.அப்பகுதியில் சிறிய சாரல் மழை பெய்ததால் தீ மேலும் 30 ஏக்கரில் பரவாமல் அடைந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News