வீடுகள் இடிக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட மக்கள் காத்திருப்பு போராட்டம்
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அருகே வீடுகள் இடிக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட மக்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் வட்டத்திற்கு உட்பட்ட செவலபுரை கிராமத்தில் கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக அங்கு உள்ள அரசு புறம்போக்கு இடத்தில் வீடு கட்டி குடியிருந்து வந்த, 93 குடும்பத்தினரை நீதிமன்ற உத்தரவை காட்டி ஆக்ரமிப்பு அகற்றம் என்ற பெயரில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
வருவாய் துறை மற்றும் வட்டார வளர்ச்சி துறையினர் காவல்துறை உதவியுடன் மக்கள் எந்த உடமைகளையும் எடுத்து கொள்ள கால அவகாசம் வழங்காமலும், மேலும் அவர்களுக்கு மாற்று இடம் கொடுக்க உறுதி மொழி கொடுத்த போதும், அந்த இடத்தை அவர்களிடம் ஒப்படைக்கும் நடவடிக்கையும் எடுக்கவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம் சுமத்தி வருகிறார்கள்.
அந்த மக்களுக்கு தங்குவதற்கு தற்காலிக ஏற்பாடுகள் செய்யப்படவில்லை, இந்நிலையில் நேற்று இரவு வரை அந்த வீடுகள் அனைத்தும் இடிக்கப்பட்டது. ஆனால் அந்த மக்களுக்கு எவ்வித உணவு, குடிநீர் என எவ்வித அடிப்படை வசதிகளின் செய்து தராமல் நடுத்தெருவில் நிறுத்திவிட்டனர் அதிகாரிகள் என அம்மக்கள் புலம்பி வருகின்றனர், இந்நிலையில் நேற்று அப்பகுதியில் திடீரென பலத்த மழை பெய்து, அம்மக்களின் துன்பத்தை அதிகப்படுத்தி விட்டது. அதாவது அதிகாரிகளுடன் சேர்ந்து இயற்கையும் விளையாடுகிறது என தங்கள் இயலாமையை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த கொடுமையை தாங்க முடியாமல், மழையில் குழந்தைகளையும் உடைமைகளையும் பாதுகாக்க முடியாமல் அம்மக்கள் மேல்மலையனூர் வட்டார வளர்ச்சி அலுவலரின் நடவடிக்கை கண்டித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு குடிநீர் வழங்குவரை வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு மேல்மலையனூர் வட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்ட செயலாளர் டி.முருகன் தலைமையில் காத்திருக்கும் போராட்டம் நடத்தினர்.