செஞ்சி அருகே கடை வாடகை பிரச்சினை: தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு

செஞ்சி அருகே வாடகை பாக்கி கொடுக்காதவர்கள் கடைக்கு சீல் வைக்க அதிகாரிகள் சென்றபோது பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-01-25 12:52 GMT
கடை வாடகை பாக்கி கேட்டு சென்ற அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

விழுப்புரம் மாவட்டம்,செஞ்சி அருகே வாடகை செலுத்தாதவர்களின் கடைகளுக்கு சீல் வைக்க வந்த அதிகாரிகளை வியாபாரிகள் தடுத்தியபோது  பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம் மாவட்டம்,செஞ்சி வட்டத்திற்கு உட்பட்டது பனைமலை ஊராட்சி, இங்கு உள்ளது உமையாள்புரம் பகுதி. இங்கு உள்ள தாளகிரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில், 100-க்கும் மேற்பட்டவர்கள் வீடு கட்டி வசித்து வருகிறார்கள். மேலும் 10-க்கும் மேற்பட்டவர்கள் கடைகளும் வைத்து இருக்கிறார்கள். இதில் கோவிலுக்கு சிலர் வாடகை கொடுக்காமல் இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால் வாடகை கொடுக்காமல் இருந்தவர்களின் கடைகளில் இருந்த பொருட்களை காலி செய்து, சீல் வைப்பதற்காக இன்று  இந்து சமய அறநிலைத்துறையினர் சென்றனர்.

அப்போது அங்கு கடை வைத்து இருக்கும் வியாபாரிகள் ஒன்று திரண்டு, வந்து அதிகாரிகளை தடுத்து நிறுத்தினர். அதேபோன்று, வாடகை செலுத்தாமல் வீடுகளில் வசிப்பவர்களையும் காலிசெய்ய வலியுறுத்த சென்றதாக கூறி, பொதுமக்களும் அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் ஒன்று சேர்ந்து அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது ஒரு பெண், தனது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். உடன் அங்கிருந்த அனந்தபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் நடராசன் தலைமையிலான போலீசார் அவரை தடுத்து நிறுத்தினார். பின்னர் இந்த பிரச்சினை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணலாம் என்று போலீசார் தரப்பில் தெரிவித்தனர்.

அதனை தொடர்ந்து அனந்தபுரம் காவல் நிலையத்திற்கு அவர்கள் அழைத்து செல்லப்பட்டனர். அங்கு இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர் விஜயராணி, வட்டாட்சியர் ஞானம், செஞ்சி துணை காவல் கண்காணிப்பாளர் பிரியதர்ஷினி, காவல் ஆய்வாளர் தங்கம், காவல் உதவி ஆய்வாளர் சங்கரசுப்பிரமணியன் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது வாடகை செலுத்தாத நபர்கள், ஒரு குறிப்பிட்ட தொகையை தற்போது செலுத்தி விடுவதாகவும், மீதமுள்ள தொகையை செலுத்த கால அவகாசம் வழங்குமாறு கேட்டுக்கொண்டனர். இதை அதிகாரிகள் ஏற்றுக்கொண்டதன் பேரில், சீல் வைக்கும் நடவடிக்கை தற்காலிகமாக கைவிடப்பட்டது. இதையடுத்து அனைவரும் அமைதியாக கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில்  பரபரப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதேபோன்று விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கோயில் இடங்களில் பலர் ஆக்கிரமிப்பு செய்து குடியிருந்து வருகின்றனர். ஆனால் இதுவரைக்கும் அவர்கள் மீது இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க தயங்கி வருவது ஏன் என்ற கேள்வி தற்போது விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் எழுந்து வருகிறது. இதனை விழுப்புரம் மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை எப்படி நடவடிக்கை எடுக்க போகிறது என்பதை எதிர்பார்த்து உள்ளனர் சமூக ஆர்வலர்கள்.

Tags:    

Similar News