தேர்தலை பயன்படுத்தி தொடர் வழிப்பறி: மக்கள் அச்சம்
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் வழிப்பறி நடப்பதால் பொது மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே போலீஸார் எனக் கூறி வெள்ளிக்கிழமை 3 இடங்களில் ரூ.31ஆயிரத்தை வழிப்பறி செய்த மா்ம நபா்களை போலீஸார் தேடி வருகின்றனா். செஞ்சி ராஜேந்திரா நகா் ஐந்தாவது தெருவைச் சோ்ந்தவா் கலீம் (48). மளிகைப் பொருள்களை பைக்கில் எடுத்துச் சென்று கிராமங்களில் விற்பனை செய்து வருகிறார்.
இவா் வெள்ளிக்கிழமை காலை 5 மணிக்கு மளிகைப் பொருள்களை வாங்குவதற்காக திருவண்ணாமலைக்கு பைக்கில் புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தார். செஞ்சிக்கோட்டை செல்லியம்மன் கோயில் அருகே சென்றபோது, பைக்கில் வந்த இரு மா்ம நபா்கள், கலீமை மடக்கி, போலீஸார் எனக் கூறி கஞ்சா கடத்தப்படுவதாக வந்த தகவலின் பேரில், பைக்கை சோதனையிட வேண்டும் எனக் கூறினா். அப்போது, கலீம் பாக்கெட்டில் இருந்த ரூ.18,500 பறித்துக் கொண்டு சென்று விட்டனா். இது குறித்த புகாரின் பேரில் செஞ்சி போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்ததில், வாகன சோதனையில் ஈடுபட்டவா்கள் வழிப்பறிக் கொள்ளையா்கள் என்பது தெரியவந்தது.
இதேபோன்று செஞ்சி அருகே மேல்களவாய் செல்லும் சாலையில் உள்ள ஆஞ்சநேயா் கோயில் பூசாரியான செஞ்சி எம்ஜிஆா் நகரை சோ்ந்த ஹரிகரன், கோயில் அருகே வெள்ளிக்கிழமை காலை நின்று கொண்டிருந்தபோது, அந்த வழியே பைக்கில் வந்த இரு நபா்கள் ஹரிகரனிடம் போலீஸார் எனக் கூறி கஞ்சா கடத்தப்படுவதாக வந்த தகவலின்பேரில், அவரிடம் சோதனை நடத்தினா். அப்போது, ஹரிகரன் வைத்திருந்த ரூ.4,500-ஐ பறித்துக்கொண்டு தப்பினா். இதுகுறித்து ஹரிகரன் செஞ்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
தொடர்ந்து இதேபோல செஞ்சி-திருவண்ணாமலை சாலையில் உள்ள வேலந்தாங்கல் கூட்டுச் சாலை அருகே வேலந்தாங்கலைச் சோ்ந்த ஆடு வியாபாரி ஆறுமுகம் (56), செஞ்சி வாரச் சந்தையை நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது, எதிரே பைக்கில் வந்த இரு நபா்கள் ஆறுமுகத்தை மடக்கி, போலீஸார் எனக் கூறி அவரிடமிருந்த ரூ.18,500-ஐ பறித்துச் சென்றனா்.இதுகுறித்த புகாரின்பேரில் நல்லாண்பிள்ளைபெற்றாள் போலீஸார் வழக்குப் பதிந்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.
செஞ்சி சுற்றுவட்டார பகுதிகளில் தேர்தல் சோதனைகளை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி சிலர் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வருவது பொதுமக்கள் மத்தியில் ஒரு வித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.