கரும்பு டன்னுக்கு ரூ. 4 ஆயிரம் வழங்க வேண்டும்: கரும்பு விவசாயிகள் கோரிக்கை
கரும்பு டன்னுக்கு ரூ. 4000 வழங்க வேண்டும் என கரும்பு விவசாயிகள் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
கரும்பு ஒரு டன்னுக்கு ரூ.4 ஆயிரம் வழங்கவேண்டுமென கரும்பு விவசாயிகள் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் செம்மேடு ராஜஸ்ரீ சர்க்கரை ஆலை மட்ட கரும்பு விவசாயிகளின் மாநாடு சனிக்கிழமை ஆலம்பூண்டி வி.எம்.திருமண மண்டபத்தில் தமிழரசன் நினைவரங்கத்தில் நடைபெற்றது.
மாநாட்டிற்கு விவசாய சங்க மாநில துணைத்தலைவர் டி.ஆர்.குண்டுரெட்டியார் தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் கோ.மாதவன் மாநாட்டை தொடங்கி வைத்தார். மாநாட்டில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் டி.ரவீந்திரன் கலந்து கொண்டு மாநாட்டு நிறைவுரையாற்றினார்.
தலைவராக ஆர். டி.குண்டு ரெட்டியார், செயலாளராக டி. சுரேஷ்குமார், பொருளாளராக காட்டு மேல்மலையனூர் விநாயகம், துணைத்தலைவராக நயம்பாடி சுப்பிரமணி, துணைச் செயலாளராக மேகராஜ் ஆகியோர் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்,
மாநாட்டில் வருவாய் பங்கீட்டு முறை சட்டத்தை ரத்து செய்ய வேண்டும், இந்த அரவை பருவத்தில் கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூபாய் 4 ஆயிரம் வழங்க வேண்டும், 5 சதவீத லாப பங்கீட்டு தொகையை ராஜஸ்ரீ சர்க்கரை ஆலை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், கரும்பு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் எஸ்.பலராமன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர்ஆர்.டி.முருகன், வட்ட செயலாளர்வி.சிவன்,ஆலை மட்ட தலைவர் டி.காண்டீபன், ஆலை மட்ட செயலாளர் டி.சுரேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.