வளத்தி அருகே சொகுசு பேருந்தில் கடத்தி வரப்பட்ட கஞ்சா பறிமுதல்

விழுப்புரம் மாவட்டம், வளத்தி அருகே சொகுசு பேருந்தில் கடத்தி வரப்பட்ட கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Update: 2021-06-04 12:30 GMT

வளத்தி அருகே சொகுசு பேருந்தில் கடத்தி வரப்பட்ட 65 கிலோ கஞ்சா பறிமுதல்

விழுப்புரம் மாவட்டம், வளத்தி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேல்மலையனூர் தாலுக்கா ஞானோதயம் கிராம சோதனை சாவடியில் வளத்தி காவல் துணை ஆய்வாளர் தேவேந்திரன் மற்றும் போலீசார் கார்த்திக், யுவராஜ் , மணிகண்டன் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு ஆம்னி பேருந்து (வண்டி எண்.NL.01 B 1158) சேத்பட்டில் இருந்து செஞ்சி நோக்கி வந்துகொண்டிந்தது பேருந்தை சோதனை செய்வதற்காக போலீசார் நிறுத்தியபோது அது நிற்காமல் சென்றது. சந்தேகமடைந்த போலீசார், உதவி ஆய்வாளர் குமார் தலைமையில் சுமார் 10 க்கும் மேற்பட்ட போலீசார் விரட்டி வந்தனர்,

போலீசார் பின் தொடர்ந்து விரட்டுவதை கண்ட பேருந்தில் இருந்து இருவர் கீழே குதித்து தப்பி ஓடிவிட்டனர். மேலும் செல்லும் வழியில் இரு இடங்களில் சில பைகளை வெளியே வீசினர். இதனை கண்ட போலீசார் அதனை கைப்பற்றி எடுத்து பார்த்த போது, அதில் கஞ்சா இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து பேருந்தை சினிமா பாணியில் வேகமாக விரட்டிய போலீசார், வளத்தி அருகே சந்தபேட்டை என்ற இடத்தில் பேருந்தை மடக்கி பிடித்தனர். காவல்நிலையம் கொண்டு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பேருந்து நின்றவுடன் பேருந்தில் இருந்த 2 பேர் தப்பியோடிவிட்டனர். தப்பி ஓடிய யுவராஜ் என்பவரை போலீசார் மடக்கி பிடிக்க முயன்றபோது அவர்களை கீழே தள்ளிவிட்டு ஓடியதில் யுவராஜ் வலது கையில் காயம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து பிடிபட்ட பேருந்து டிரைவர் மதுரை திருநகரை சேர்ந்த நடராஜ் என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது பீகாரில் இருந்து மதுரைக்கு 65 கிலோ எடை கொண்ட 29 கஞ்சா பொட்டலங்களை கடத்தி செல்வதாக கூறினார்.

பின்னர் ஆம்னி பேருந்தில் இருந்த 65 கிலோ எடை கொண்ட 29 கஞ்சா பொட்டலங்கள் மற்றும் 15 மதுபாட்டில்களை கைப்பற்றி வளத்தி காவல் நிலைய வளாகத்தில் நிறுத்தி வைத்துள்ளனர். தப்பியோடிய கிளினர் அருண் மற்றும் அவரது நண்பர் ஆகியோரை தேடி வருகின்றனர்.தகவல் அறிந்து வந்த விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ராதாகிருஷ்ணன் மற்றும் செஞ்சி காவல் துணை கண்காணிப்பாளர் இளங்கோவன் ஆகியோர் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மற்றும் ஆம்னி பேருந்தை ஆய்வு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ 10 லட்சம் என போலீஸôர் தெரிவித்தனர்.

விழுப்புரம் திருவண்ணாமலை மாவட்ட எல்லையான செஞ்சி சேத்துப்பட்டு செல்லும் சாலையில் உள்ள ஞானோதயம் சோதனை சாவடியில் புதன்கிழமை நள்ளிரவு 24 டன் ரேசன் அரிசியை கண்டெய்னர் லாரியுடன் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன் 60 லட்சம் மதிப்புள்ள 35 லிட்டர் கொள்ளவு உள்ள 573 எரிசாரய கேன்களையும், 7 லட்சம் மதிப்புள்ள குட்கா புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News