செஞ்சி அருகே வெடி மருந்துகளுடன் வந்த 4 பேர் கைது

செஞ்சி அருகே வெடி மருந்துகளுடன் வந்த புதுச்சேரியை சேர்ந்த நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்

Update: 2021-09-20 16:51 GMT

பைல் படம்.

விழுப்புரம் மாவட்டம் அனந்தபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் செந்தாமரைக்கண்ணன், சங்குராஜன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதன் ஆகியோர் தலைமையிலான போலீசார் செஞ்சியை அடுத்த அனந்தபுரம் பஸ் நிறுத்தம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர் போலீசாரை பார்த்தும் திரும்பிச் செல்ல முயன்றனர். இதைபார்த்து உஷாரான போலீசார் அந்த 4 பேரையும் மடக்கி பிடித்து, அவர்கள் வைத்திருந்த பையை சோதனையிட்டதில், நாட்டுத்துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் வெடி மருந்துகள், பால்ரஸ்கள் மற்றும் 8 மதுபாட்டில்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து பிடிபட்ட நபர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் புதுச்சேரி மாநிலம் தொண்டமாநத்தம் கிராமத்தை சேர்ந்த பத்மநாபன்(வயது 21),  விமல்குமார்(28), அய்யப்பன்(41), மூர்த்தி(29) ஆகியோர் என்பதும், வெடி மருந்துகளுடன் பத்மநாபன் உறவினர் ஊரான கணக்கன்குப்பத்துக்கு சென்று, நரிக்குறவர் உதவியுடன் நாட்டுத்துப்பாக்கி மூலம் அருகில் உள்ள வனப்பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாடி, அதனை அங்கு வைத்து சாப்பிட்டு விட்டு, புதுச்சேரி சென்றபோது சிக்கியதும் தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த வெடிமருந்துகள், மதுபாட்டில்கள் மற்றும் அதனை எடுத்துச் செல்ல பயன்படுத்தப்பட்ட 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

Similar News