உணவு பாதுகாப்புத் துறை அலட்சியம்: காலாவதி பொருட்கள் விற்பனை ஜோர்

Food And Safety - விழுப்புரம் மாவட்டத்தில் நகரம் மற்றும் கிராமப் பகுதிகளில் உள்ள கடைகளில் காலாவதி தேதி தெரிந்தும் தெரியாமலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது என பொதுமக்கள் குற்றச்சாட்டை வைத்து வருகின்றனர்.;

Update: 2022-09-13 02:15 GMT

பைல் படம்.

Food And Safety -விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே அனந்தபுரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 500 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர், இந்நிலையில் 7-ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் திங்கட்கிழமை தனது பிறந்த நாளையொட்டி சக மாணவர்கள் 30 பேருக்கு சாக்லேட் வழங்கியுள்ளார்.

அதை வாங்கி சாப்பிட்ட 7 மாணவர்களுக்கு திடீரென வாந்தி -மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள், அந்த மாணவர்களை சிகிச்சைக்காக அதே பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

அடுத்தடுத்து சாக்லேட் சாப்பிட்டு மயங்கிய மாணவர்களுக்கு அங்கு டாக்டர்கள் உரிய சிகிச்சை அளித்தனர்.

இதனிடையே மாணவர் கொடுத்த சாக்லேட்டை சாப்பிட்ட மற்ற மாணவர்களுக்கும் அடுத்தடுத்து லேசான மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் பாலாஜி, டாக்டர்கள் லட்சுமி, நிவேதா உள்ளிட்ட மருத்துவ குழுவினர் பள்ளிக்கு விரைந்து சென்று அங்கிருந்த மாணவர்களை பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர்.

இதுகுறித்த தகவலின் பேரில் அனந்தபுரம் போலீசார் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர். இதனிடையே மாணவர் சாக்லேட் வாங்கிய கடைக்கு உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சென்று அங்கிருந்த சாக்லேட்டை பறிமுதல் செய்து அவை காலாவதியானதா என்பதை கண்டறிய ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் இது தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சென்று விசாரணை ஏதும் நடத்தவில்லை. இது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நகர பகுதிகளில் உள்ள கடைகளில் மட்டும் அவ்வப்போது ஆய்வு நடத்திவிட்டு செல்கின்றனர்.

கிராமப்புறங்களில் உள்ள கடைகளுக்கு சென்று அங்கு காலாவதியான பொருட்கள் வி்ற்பனை செய்யப்படுகிறதா என்று ஆய்வு செய்வதில்லை என குற்றச்சாட்டு எழுப்பினர்.

இதனால் கடைகளில் சிலர் காலாவதி தேதி தெரிந்தும், தெரியாமலும் காலாவதியான பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர்.

எனவே காலாவதியான பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்க உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கிராமப் புறங்களில் உள்ள கடைகளிலும் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags:    

Similar News