விண்ணப்பித்த அனைவருக்கும் மின் இணைப்பு வழங்க விவசாயிகள் கோரிக்கை

மேல்மலையனூரில் நடைபெற்ற விவசாயிகள் மாநாட்டில் விண்ணப்பித்த அனைவருக்கும் மின்இணைப்பு வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினர்.;

Update: 2022-07-21 14:15 GMT

விவசாயிகள் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய  நிர்வாகிகள்.

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மேல்மலையனூர் வட்டக்குழு சார்பில் மாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்கு வட்டத் தலைவர் காண்டீபன் தலைமை தாங்கினார். வட்டத் துணைத் தலைவர் ரவி சங்க கொடி ஏற்றி வைத்தார். வட்ட துணைத்தலைவர் சுரேஷ் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். வட்ட செயலாளர் எழில் ராஜா வேலை அறிக்கையை வசித்தார்.

மாநாட்டில் மாநில பொருளாளர் பெருமாள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மாவட்ட செயலாளர் முருகன், மாவட்ட தலைவர் சிவராமன், மாநில குழு உறுப்பினர் தாண்டவராயன், மாவட்டத் துணைத் தலைவர் மாதவன் ஆகியோர் மாநாட்டை வாழ்த்தி பேசினர். மாநாட்டில் மேல்மலையனூர் வட்டத்தில் வேளாண் மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்துள்ள அனைத்து விவசாயிகளுக்கும் தமிழக அரசு உடனடியாக மின் இணைப்பு வழங்க வேண்டும். மேல்மலையனூர் வட்டத்தில் விளையும் ஒரே பயிரான நெல்லுக்கு ஆண்டு முழுவதும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை செயல்படுத்த இப்பகுதியில் அமைக்க வேண்டும்.

இதே பகுதியில் சாலை விரிவாக்கத்துக்கும், உயர்மின் கோபுரம் அமைப்பதற்கும் நிலம் கையகப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. இதனால் நிலத்தின் மதிப்பு குறைகிறது. மாநில, மத்திய அரசு விவசாயின் விருப்பமின்றி நிலம் எடுப்பதை தவிர்க்க வேண்டும். எடுக்கப்பட்டுள்ள நிலத்திற்கு சந்தை மதிப்பை கணக்கிட்டு பத்து மடங்கு இழப்பீடு அதிகப்படுத்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில் புதிய மேல்மலையனூர் வட்டத் தலைவராக காண்டீபன், வட்ட செயலாளராக எழில் ராஜா, வட்ட பொருளாளராக ரவி ஆகியோர் உட்பட 21 பேர் கொண்ட புதிய வட்டக் குழு தேர்வு செய்யப்பட்டனர். முடிவில் மனோகரன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News