ஒரே நாளில் பழங்குடி மாணவர்களுக்கு சாதி சான்றிதழ் வழங்கிய முதல்வர் ஸ்டாலின்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் ஒரே நாளில் பழங்குடியின மாணவர்களுக்கு சான்றிதழை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

Update: 2022-07-10 05:22 GMT

செஞ்சியில் பழங்குடியின மாணவருக்கு ஒரே நாளில் சாதி சான்றிதழை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

திருவண்ணாமலையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை வழங்குவதற்காக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம், செஞ்சி வழியாக நேற்று காரில் சென்றார். அப்போது வழிநெடுகிலும் பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் கொடுத்த வரவேற்பையும் மனுக்களையும் பெற்றுக் கொண்டார்.

இதில் செஞ்சி வட்டம் செம்மேடு கிராமத்தை சேர்ந்த பழங்குடியின முருகன் மகன் வாசன், மகள் பூஜா ஆகியோர் தங்களுக்கு கடந்த 7 ஆண்டுகளாக பழங்குடி பட்டியல் இன சான்றிதழை அதிகாரிகள் வழங்க மறுக்கின்றனர். இதனால் எங்களுக்கு சாதி சான்றிதழ் இல்லாத நிலையில் அரசு வழங்கும் உதவி தொகைகள், மற்றும் கல்வி மேற்படிப்பு படிக்க முடியாத நிலையில் பாதிக்கப்பட்டு உள்ளோம் என  உடனடியாக நடவடிக்கை எடுத்து சாதி சான்றிதழ்வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு அளித்திருந்தனர். மனுவை பெற்றுக்கொண்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்த மனு மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து மாணவர்களுக்கு பழங்குடி பட்டியல் இன சான்றிதழ் தயார் செய்யப்பட்டு அவைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கையால் வழங்க அதிகாரிகள் ஏற்பாடு செய்திருந்தனர், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், திருவண்ணாமலையில் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு செஞ்சி வழியாக சென்னை சென்ற போது, செஞ்சி பயணிகள் விடுதிக்கு வந்தார். அதனை தொடர்ந்து மனு கொடுத்த மாணவர்களான வாசன், பூஜா மற்றும் அவர்களது பெற்றோரிடம் பழங்குடி பட்டியல் இன வகுப்பு சான்றிதழ்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

அப்போது அமைச்சர்கள் பொன்முடி, எ.வ. வேலு, செஞ்சி மஸ்தான், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் ஆகியோர் உடனிருந்தனர். நீண்ட நாட்களாக சான்றிதழ் பெற முடியாமல் தவித்த மாணவர்களுக்கு மனு அளித்த மறுநாளே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தன் கையாலேயே சான்றிதழ் வழங்கிய சம்பவம் அப்பகுதி மக்கள் மற்றும் அந்த சமூக மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதில் பூஜா, பிளஸ்-2 முடித்து விட்டு கல்லூரியில் சேர இருப்பதும், வாசன், சத்தியமங்கலம் அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. ஒரு நாளில் வழங்கக்கூடிய இது போன்ற சான்றிதழ் கிடைக்காமல் இதுநாள் வரை தமிழகத்தில் ஏன் விழுப்புரம் மாவட்டத்திலும் பல ஆயிரக்கணக்கான பழங்குடி மக்கள் பாதிக்கப்பட்டு பல ஆண்டுகளாக சாதி சான்றிதழ் கிடைக்குமா என காத்திருக்கும் நிலை தான் அதிகாரிகளின் அலட்சிய போக்கால் நீடித்து வருகின்றது என அந்த சமூக மக்கள் மத்தியில் குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

ஆகையால் இப்போது முதல்வர் ஒரே நாளில் வழங்கியது மாதிரி வழங்க வேண்டாம், அதிகபட்சமாக பல ஆண்டுகள் கடத்தாமல் சில நாட்களில் வழங்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த சமூக மக்கள் ஆனந்தத்திற்கு மத்தியில் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Tags:    

Similar News