வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர் சடலமாக மீட்பு
செஞ்சி அருகே மேல்மலையனூர் ஒன்றியம் வராக நதியில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர் சடலம் மீட்பு
மேல்மலையனூர் அருகே சிறுவாடி கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் சிவக்குமார் வயது 45. இவர் , கடந்த 02-11-2021 அன்று மாலை செவலபுரை கிராமத்தில் இருந்து சிறுவாடி கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தார். செல்லும் வழியில் உள்ள வராக நதியினை கடக்கும் போது ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார்.
உடனடியாக தகவலறிந்த மேல்மலையனூர் மற்றும் செஞ்சி தீீயணைப்பு படையினர், கடந்த மூன்று நாட்களாக தேடுதல் பணியில் ஈடுபட்டு வந்தனர். இன்று மத்திய மண்டல துணை இயக்குநர் (கூடுதல் பொறுப்பு) சரவணக்குமார் உத்தரவின் பேரில் விழுப்புரம் மாவட்ட அலுவலர் ராபின் காஸ்ட்ரோ தலைமையில் விழுப்புரம் மற்றும் திருவெண்ணைநல்லூர் ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து 15 பணியாளர்களுடன் மீட்பு குழுவினர் வந்தனர்,
அவர்கள் செஞ்சி மற்றும் மேல்மலையனூர் பணியாளர்களுடன் சேர்ந்து தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆற்றில் அடித்து செல்லப்பட்ட இடத்தில் இருந்து சுமார் 1கிமீ தொலைவில் முள்புதரில் நீருக்கடியில் சிக்கிக் கொண்டிருந்த சடலத்தை மீட்டு வளத்தி காவல்துறை ஆய்வாளர் கலைச்செல்வி வசம் ஒப்படைத்தனர்.
இந்தமீட்பு பணியில் உதவி மாவட்ட அலுவலர், நிலைய அலுவலர்கள் மேல்மலையனூர் மற்றும் செஞ்சி மற்றும் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 35 பணியாளர்கள் ஈடுபட்டனர்.இது குறித்து வளத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.