வேலூரில் இரவு நேர ஆட்டோக்களுக்கு கட்டுப்பாடு
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேலூரில் இரவு நேர ஆட்டோக்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
வேலூரில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நள்ளிரவில் இயக்கப்படும் ஆட்டோக்களுக்கு கட்டுப்பாடுகள் கொண்டு வருவது குறித்து ஆலோசிக்கப்படும் என டி.ஐ.ஜி. ஆனி விஜயா தெரிவித்தார்.
வேலூர் மாநகரில் ஆட்டோ டிரைவர்கள் போர்வையில் இருக்கும் சில சமூக விரோதிகள் அவ்வப் போது குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள், அவ்வப்போது குற்றச் செயல்களில் ஈடுபட்டு வரும் நிலையில் அவர்களை போலீசார் கைது செய்கின்றனர். இதில், இரவு நேரங்களில் பெண் பயணிகளின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ள சம்பவம் 2 நாட்களுக்கு முன்பு நடைபெற்றுள்ளது.
காட்பாடி பகுதியில் உள்ள பிரபல தியேட்டரில் நள்ளிரவில் படம் பார்த்துவிட்டு ஷேர் ஆட்டோவில் ஆண் நண்பருடன் வந்த தனியார் மருத்துவமனை பெண் ஊழியரை 4 பேர் கும்பல் கத்தி முனையில் கடத்திச் சென்று பாலியல் ரீதியாக துன்புறுத்தியதுடன், அவர்களிடம் இருந்து ரூ.40 ஆயிரம் பணத்தை பறித்துள்ளனர். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இளம்பெண் இதுவரை புகார் தெரிவிக்காத நிலையில், சத்துவாச்சாரி போலீசார் 3 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
இவர்கள் 3 பேரும் வேறு ஒரு அடிதடி வழக்கில் சிக்கிய நிலையில், போலீஸ் விசாரணையில் இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற பாலியல் துன்புறுத்தல் சம்பவத்தை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து, பாதிக்கப்பட்ட இளம் பெண்ணின் விவரங்களை சேகரித்து வருகின்றனர். இளம் பெண்ணின் ஏடிஎம் கார்டை பயன் படுத்தி சத்துவாச்சாரியில் உள்ள ஒரு ஏடிஎம் மையத்தில் ரூ.40 ஆயிரம் பணத்தை எடுத்துள்ளதால் அதன் வங்கி விவரங்களை கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் சேகரித்து வருகின்றனர்.
நள்ளிரவில் படம் பார்த்துவிட்டு ஆட்டோவில் திரும்பிய இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமையால் நள்ளிரவில் ஆட்டோவில் பயணிக்கும் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. எனவே, இரவு நேர ஆட்டோக்களுக்கு கட்டுப் பாடுகளையும் அடையாள அட்டைகளை வழங்கி முறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், வேலூர் மாகராட்சியின் பல்வேறு பகுதிகளில் இரவு நேரத்தில் மட்டும் 300க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன. குறிப்பாக, காட்பாடி பகுதியில் இருந்து அதிகளவில் இயக்கப் படுகின்றன. காட்பாடி ரெயில் நிலையம், அங்குள்ள முக்கிய தியேட்டர்கள் இருப்பதால் எந்த நேரமும் ஆட்டோக்கள் வந்து சென்று கொண்டே இருக்கிறது. ஒரு சிலரின் தவறான செயல்களால் மொத்த ஆட்டோ டிரைவர்களின் பெயர்களும் பாதிக்கிறது. எனவே, இரவு நேர ஆட்டோக்களுக்கு தனி அடையாள அட்டை, ஸ்டிக்கர் உள்ளிட்டவற்றை வழங்கலாம்.இப்படி செய்யும்போது இரவு நேரத்தில் ஆட்டோ ஓட்டுபவர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என தெரிவித்துள்ளனர்.