வேலூர் ஜெயிலில் பரோல் கேட்டு முருகன் உண்ணாவிரதம்
இன்று காலை முதல் பரோல் கிடைக்கும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக முருகன் கூறியுள்ளார்
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது மனைவி நளினி பெண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தார். தற்போது பரோலில் வெளியே வந்துள்ள அவர் காட்பாடி பிரம்மபுரத்தில் தங்கியுள்ளார்.
இந்த வழக்கில் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பேரறிவாளன் பரோலில் வெளியே வந்தார். தற்போது அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
முருகன் பரோல் கேட்டு சட்டபோராட்டம் நடத்தி வருகிறார். அவருக்கு பரோல் வழங்கப்படவில்லை. இதனால் விரக்தியடைந்த அவர் இன்று காலை உணவு சாப்பிட மறுத்தார். பரோல் கிடைக்கும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக தெரிவித்துள்ளார்.
அவரிடம் சிறைத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் அவர் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருவதாக கூறப்படுகிறது.
முருகன் காலையில் உணவு சாப்பிடவில்லை. ஆனால் அவர் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக முறைப்படி மனு எதுவும் அளிக்கவில்லை என சிறைத் துறையினர் தெரிவித்தனர்.