லஞ்சம் வாங்கி கைதான நில அளவையர் சிறையில் அடைப்பு
லஞ்சம் வாங்கி கைதான ஆம்பூர் வட்டாட்சியர் அலுவலக நிலஅளவையர் சிறையில் அடைக்கப்பட்டார்;
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள மின்னூரை சேர்ந்தவர் சேகர் (வயது 33). ஐ.டி. நிறுவன ஊழியர். இவர் கடந்த செப்டம்பர் மாதம் தனது கிராமத்தில் உள்ள நிலம், வீட்டுமனையை அளவீடு செய்வதற்காக ஆன்லைனில் விண்ணப்பித்தார். ஆம்பூர் தாலுகா அலுவலகத்தில் நிலஅளவையராக பணிபுரியும் வேலூர் சேண்பாக்கத்தை சேர்ந்த பாலாஜி (37) நிலம், இடத்தை அளவீடு செய்ய லஞ்சமாக ரூ.8 ஆயிரம் தரும்படி சேகரிடம் கேட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் ரசாயனம் தடவிய நோட்டுகள் ரூ.8 ஆயிரத்தை சேகரிடம் வழங்கினர். அவர் அதனை நிலஅளவையர் பாலாஜியிடம் நேற்று முன்தினம் கொடுத்தபோது லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் லஞ்சமாக பெற்ற ரூ.8 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
அதைத்தொடர்ந்து வேலூர் சேண்பாக்கம் கழனிகாட்டுத்தெருவில் உள்ள பாலாஜியின் வீட்டில் மாலை 4 மணியளவில் வேலூர் லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி தலைமையிலான போலீசார் சோதனை செய்தனர். இந்த சோதனையானது நள்ளிரவு 2 மணி வரை நீடித்தது.
10 மணி நேரம் நடைபெற்ற சோதனையில் பாலாஜி வீட்டில் இருந்து கட்டுக்கட்டாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.22 லட்சத்து 84 ஆயிரத்து 650 சிக்கியது. உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்த பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவரின் வங்கிக்கணக்குகள், அசையும், அசையா சொத்துகள் குறித்து கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது.
இதனை தொடர்ந்து வேலூர் கோர்ட்டில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டு குடியாத்தம் கிளை ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
நிலஅளவையர் பிரிவில் பணியாற்றி வந்த பாலாஜியின் தந்தை, கடந்த 2017-ம் ஆண்டுபணியின்போது உயிரிழந்தார். அதைத்தொடர்ந்து வாரிசு அடிப்படையில் பாலாஜிக்கு நிலஅளவையர் வேலை கிடைத்துள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு அவர் பணியில் சேர்ந்துள்ளார்.
கருணை அடிப்படையில் வேலை கிடைத்தும், கருணையே இல்லாமல் லஞ்சம் வாங்கும் இதுபோன்ற அலுவலர்கள் திருந்துவது எப்போது?