வேலூர் உள்பட 4 மாவட்டங்களில் கைவரிசை காட்டிய நகை கொள்ளையர்கள் கைது
வேலூர் உள்பட 4 மாவட்டங்களில் கைவரிசை காட்டிய நகை பறிப்பு கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர், அவர்ளிடமிருந்து 57 பவுன் நகைகள் மீட்பு
வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் மர்மநபர்கள் தனியாக செல்லும் பெண்களிடம் நகை பறித்துச் செல்லும் சம்பவங்கள் நடந்து வருகிறது. கடந்த மாதம் 6-ந் தேதி சத்துவாச்சாரி பகுதியில் ஒரு பெண்ணிடம் மோட்டார்சைக்கிளில் வந்த மர்மநபர்கள் நகையை பறித்துச் சென்றனர்.
குற்றவாளிகளை கைது செய்ய வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் உத்தரவிட்டார். இதையடுத்து தனிப்படை போலீசார் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். சத்துவாச்சாரி பகுதியில் பெண்ணிடம் நகை பறித்துச் சென்ற சம்பவத்தை மையமாக கொண்டு தனிப்படை போலீசார் விசாரணையை தொடங்கினர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, மோட்டார்சைக்கிளில் முகமூடி, குல்லா மற்றும் அவர்களின் உடையை வைத்து தேடுதல் வேட்டை நடத்தினர்.
பிள்ளையார்குப்பம், பூட்டுத்தாக்கு, விஷாரம், ஆற்காடு, மாசாபேட்டை, புங்கனூர், நாயக்கன்தோப்பு, கண்ணமங்கலம், சாத்துமதுரை, பென்னாத்தூர், ஊசூர் வரை பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். இதையடுத்து போலீசாரின் சோதனையில் அணைக்கட்டு புதுமனை கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணி (வயது 20), குடியாத்தம் கொட்டாவூர் கிராமத்தை சேர்ந்த ஜார்ஜ் லீ (26) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
பின்னர் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்களிடம் இருந்து சுமார் 57 பவுன் நகைகள் மீட்கப்பட்டன. மேலும் ஒரு மோட்டார்சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. மீட்கப்பட்ட நகைகளின் மதிப்பு ரூ.20 லட்சம் இருக்கும். இதுகுறித்து போலீசார் கூறுகையில், கைது செய்யப்பட்ட இருவரும் பெண்களிடம் நகை பறிப்பதையே வேலையாக கொண்டிருந்தனர். தனியாக செல்லும் பெண்களை குறி வைத்து கைவரிசை காட்டி உள்ளனர். வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் மோட்டார்சைக்கிளில் வலம் வந்து நகை பறித்துள்ளனர்.
பறிக்கப்பட்ட நகைகளில் பலவற்றை விற்று சொகுசு வாழ்க்கை வாழ்ந்துள்ளனர். ஜார்ஜ் லீ ஆந்திர மாநிலம் சித்தூரிலும் வசித்து வந்துள்ளான். இருவரும் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 16 நகை பறிப்பு வழக்குகளில் தொடர்புடையவர்கள். அதில் 12 வழக்குகளில் சம்பந்தப்பட்ட நகைகளே மீட்கப்பட்டுள்ளன. மீதம் உள்ள நகைகளை விற்றுள்ளனர். அவர்கள் யாரிடம் விற்றனர்?, வேறு யாருக்காவது தொடர்புள்ளதா? என விசாரணை நடத்தி வருகிறார்கள்.
2 கொள்ளையர்களை கைது செய்த தனிப்படை போலீசாரை நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் பாராட்டினார்.