வேலூரில் கொரோனா தடுப்பூசி போடாத அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை
விதிவிலக்கு அளிக்கப்பட்டவர்களை தவிர்த்து அனைத்து அரசு ஊழியர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என கலெக்டர் தகவல்.
வேலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது. கலெக்டர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்ததாவது:-
வேலூர் மாவட்டத்தில் கொரோனாவை கட்டுப்படுத்தும் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். தினந்தோறும் குறைந்தது 3,500 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும். அனைத்து அரசுத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். விதிவிலக்கு அளிக்கப்பட்டவர்களை தவிர்த்து தடுப்பூசி போடாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவர்களுக்கு உதவியாக உறவினர்கள் அருகில் இருப்பதால் கொரோனா பரவல் அதிகரிக்கக்கூடும். உதவியாளர்கள் வெளியே சென்று பொருட்கள் வாங்குவதும், மீண்டும் கொரோனா வார்டுக்கு வருவதால் பரவல் அதிகரிக்கும். இதை தடுக்கும் வகையில் நோயாளியுடன் உதவியாளர்கள் அருகில் இருக்க அனுமதி கிடையாது.
நோயாளிகளுடன் பேசுவதற்கும், அவர்களின் நலன் குறித்து தெரிந்து கொள்வதற்கும் அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள். அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட செல்போன் மூலம் உறவினர்கள் நோயாளிகளை தொடர்பு கொள்ளலாம். இந்த நடைமுறை குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் குழந்தைகள் வைத்திருக்கும் பெற்றோருக்கு பாதிப்பு ஏற்பட்டால் குழந்தைகளை கவனிக்க முடியாத சூழல் ஏற்படுவதால், குழந்தைகள் வைத்திருக்கும் பெற்றோர் குறித்த பட்டியலை தயார் செய்து அவர்கள் தடுப்பூசி போடுவதை உறுதிசெய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.