ஒருங்கிணைந்த வேலூர் , திருவண்ணாமலை மாவட்டத்தில் 1550 பள்ளிகள் நாளை திறப்பு

ஒருங்கிணைந்த வேலூர் , திருவண்ணாமலை மாவட்டத்தில் 1550 பள்ளிகள் நாளை திறப்பதை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

Update: 2021-08-31 14:48 GMT

தமிழகம் முழுவதும் கொரோனா படிப்படியாக குறையத் தொடங்கியிருப்பதால் , 9 முதல் பிளஸ் 2 வரை வகுப்புகளை நடத்தவும் , கல்லூரிகள் செயல்படவும் தமிழக அரசு அனுமதித்துள்ளது .ஒருங்கிணைந்த வேலூர் , திருவண்ணாமலை மாவட்டங்களில் 1552 பள்ளிகள் நாளை திறக்கப்பட உள்ளது . இதையொட்டி கொரோனா பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது . 

கல்லூரிகளில் இளநிலை மற்றும் முதுநிலை வகுப்புகள் 50 சதவீத மாணவர்களுடன் சுழற்சி முறையில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வேலூர் மாவட்டத்தில் அரசு உயர்நிலை மற்றும் மேல் நிலைப்பள்ளி, சுய நிதி மற்றும் தனியார் பள்ளிகள் என மொத்தம் 281 பள்ளிகள் உள்ளன. இதில் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டமாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு, அரசு நிதியுதவி மற்றும் சுயநிதி பள்ளிகள் உள்பட மொத்தம் 545 பள்ளிகளும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 250 க்கும் மேற்பட்ட பள்ளிகளும் , திருப்பத்தூர் மாவட்டத்தில் 476 பள்ளிகளும் நாளை முதல் செயல்பட உள்ளன.

அதையொட்டி, பள்ளிகள் அனைத்தும் சம்பந்தப்பட்ட ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி அமைப்புகளின் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தூய்மைப்படுத்தப் பட்டுள்ளன. மாணவர்கள் சமூக இடைவெளியுடன் அமருவதற்கான முன்னேற்பாடுகள் செய்யப் பட்டுள்ளது. 10 மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு தினமும் வகுப்புகள் நடைபெற உள்ளது . ஒவ்வொரு வகுப்பறையிலும் 20 மாணவர்கள் மட்டுமே சமூக இடை வெளி பின் பற்றி அமரவைக்க வேண்டும் . போதிய இடவசதி இல்லை எனில் , 9 மற்றும் 11 ம் வகுப்பு மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்த வேண்டும் . தனியார் பள்ளிகளில் மட்டும் , பள்ளிக்கு வருகை தர இயலாத மாணவர்களுக்கு தொடர்ந்து இணையவழி வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் .

மாணவர்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆசிரியர்கள், சத்துணவு பணியாளர்கள், அலுவலக பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்தியுள்ளதை உறுதி செய்ய வேண்டும். தடுப்பூசி செலுத்தாத ஆசிரியர்கள் பணியில் ஈடுபடுத்தக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கல்லூரிகளுக்கு பேராசிரியர்கள், உதவி பேராசியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திய சான்றுடன் பணிக்கு வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 18 வயதுக்கு மேற்பட்ட கல்லூரி மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான முகாம் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 2021 2022ம் ஆண்டிற்கான பாடப்புத்தகங்கள் மாணவர்களுக்கு ஏற்கனவே வழக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது .

Tags:    

Similar News