குடியாத்தத்தில் தொடர்ந்து பைக் திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது
குடியாத்தத்தில் தொடர் பைக் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது. அவர்களிடமிருந்து 5 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்
குடியாத்தம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து இரு சக்கர வாகன திருட்டு சமீபகாலமாக அதிகரித்துள்ள நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் உத்தரவின் பேரில் குடியாத்தம் காவல் ஆய்வாளர் சீனிவாசன் தலைமையிலான குடியாத்தம் நகர காவல் துறையினர் குடியாத்தம் சந்தப்பேட்டை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளனர். சந்தேகமடைந்து அவர்கள் இருவரையும் குடியாத்தம் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது
மேலும் விசாரணையில் அவர்கள் உப்பரபல்லி பகுதியை சேர்ந்த கமல்ராஜ் (21) என்பதும் மற்றொருவர் பரவக்கல் பகுதியை சேர்ந்த அஜித்குமார் (22) என்பதும் தெரியவந்தது. மேலும் அவர்களிடம் இருந்த 5 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார் கமல்ராஜ் மற்றும் அஜித் குமார் ஆகிய இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.