வேலூர் மாவட்டத்தில் அடுத்தடுத்து நில அதிர்வு. அதிர்ந்து போன மக்கள்

வேலூர் மாவட்டத்தில் ஒரு மாதத்திற்குள் 3வது முறையாக நிலஅதிர்வு ஏற்பட்டதால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்

Update: 2021-12-25 12:14 GMT

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே பேர்ணாம்பட்டில் இன்று காலை 9:30 மணியளவில் அடுத்தடுத்து 2 முறை நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. சுமார் 3 வினாடிகளுக்கு ஏற்பட்ட நில அதிர்வால் வீட்டில் இருந்த பாத்திரங்கள், பொருட்கள் உருண்டு விழுந்ததாக கூறப்படுகிறது. நில அதிர்வால் அச்சமடைந்த மக்கள் வீட்டை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர்.

ஏற்கனவே கடந்த நவம்பர் மாதம் 29ம் தேதி பேர்ணாம்பட்டு அருகே உள்ள கமலாபுரம், சிந்தக்கனவாய், கவுரவப்பேட்டை, டிடி மோட்டூர், பெரியப்பள்ளம் ஆகிய 5 கிராமங்களில் நில அதிர்வு ஏற்பட்டது.

அதை தொடர்ந்து கடந்த 23ம் தேதியும் பேர்ணாம்பட்டு சுற்றுவட்டாரத்தில் நில அதிர்வு உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவாகியிருந்தது. இந்நிலையில் 3வது முறையாக அதே இடத்தில் மீண்டும் நில அதிர்வு ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

வேலூர் நில அதிர்வு குறித்து வருவாய் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். நில அதிர்வுக்கான காரணம் குறித்து  நிபுணர்களை கொண்டு கண்டறியுமாறு மக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். மேலும் பெரிய பாதிப்புகள் ஏற்படும் முன்னர் காரணத்தை கண்டறிந்து தக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News