கடன் வழங்குவதாக கூறி அலைக்கழித்த வங்கியை கண்டித்து பெண்கள் போராட்டம்
குடியாத்தத்தில் கறவை மாடுகளுக்கு கடன் வழங்குவதாக இரண்டு வருடமாக அலைக்கழித்த வங்கி நிர்வாகத்தைக் கண்டித்து பெண்கள் போராட்டம்
குடியாத்தம் அடுத்த கதிர்குளம் கிராமம் பகுதியில் மகளிர் சுய உதவிக்குழுவை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பெண்கள் கரவை மாடுகள் வைத்து பால் விற்பனை செய்து வருகின்றனர். இக்குழுவினர் காட்பாடியில் உள்ள தனியார் வங்கியில் தொழில் செய்வதற்காக கடன் பெற்று அதை சரியாக கட்டி வந்த நிலையில், அரசாங்கத்தில் கறவை மாடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் இவர்களுக்கு கடனுதவி வழங்க ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் காட்பாடியில் உள்ள தனியார் வங்கியில் இவர்களுக்கு மானியம் இல்லை என கூறப்பட்டது.
இதனால் கடந்த 2019 ம் ஆண்டு குடியாத்தத்தில் உள்ள அரசுடமை வங்கியை (இந்தியன் வங்கி )மகளிர் சுய உதவிக் குழுவினர் நாடினர். அப்பொழுது அந்த வங்கியின் மேலாளர் மகளிர் சுய உதவி குழுவில் உள்ள 58 பேருக்கும் வங்கி கணக்கு தொடங்கப்பட வேண்டும் எனவும் அதில் பணம் டெபாசிட் செய்தவுடன் தங்களுக்கு கறவை மாடுகளுக்கான கடனுதவி வழங்கப்படும் எனவும் கூறியுள்ளார்.
58 பெண்களும் வங்கியில் கணக்கு தொடங்கி அதில் 10 ஆயிரம் டெபாசிட் செய்யப்பட்ட நிலையில் கடந்த இரண்டு வருடங்களாக கறவை மாடுகளுக்கு கடன் உதவி அளிக்காமல் அலைகழிக்கப்பட்டு வருவதாக கூறி இன்று 50 க்கும் மேற்பட்ட பெண்கள் வங்கியில் முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் காணப்பட்டது.
குடியாத்தம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மேற்கொண்ட பேச்சுவார்த்தையில் இவர்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வங்கி நிர்வாகத்தினர் தெரிவித்ததை அடுத்து பெண்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் காணப்பட்டது.