வாகன வசதி இல்லாததால் கர்ப்பிணியை டோலிகட்டி தூக்கிவந்த கிராம மக்கள்

ஊசூர் அருகே மலை கிராமத்துக்கு வாகன வசதி இல்லாததால் கர்ப்பிணியை டோலி கட்டி தூக்கி வந்த கிராம மக்கள்

Update: 2021-12-15 05:28 GMT

கர்ப்பிணியை டோலியில் தூக்கிவரும் கிராம மக்கள்

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா பீஞ்சமந்தை ஊராட்சிக்குட்பட்ட ஊசூர் அருகே உள்ள சடையன் கொல்லை மலை கிராமத்தைச் சேர்ந்தவர் ரஞ்சித் (வயது 28). இவரது மனைவி அனிதா (24). இவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிறது. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அனிதாவுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. தொடர் மழையின் காரணமாக சாலைகள் அனைத்தும் சேறும் சகதியுமாக மாறி, கற்கள்  பெயர்ந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற அவல நிலையில் உள்ளது.

இந்த கிராமத்தில் வசிக்கும் பொதுமக்கள் சிகிச்சைக்காக 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒடுகத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஊசூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தான் வர வேண்டும். சாலைகள் சேறும் சகதியுமாக உள்ளதால் வாகனப் போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக அனிதாவை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்வதில் சிரமம் ஏற்பட்டது.வாகன வசதி இல்லாததால் அவரை கிராம மக்கள் டோலி கட்டி 20 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஊசூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தூக்கி வந்துகொண்டிருந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த அத்தியூர் ஊராட்சிமன்ற தலைவர் அண்ணாமலை, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்து கலங்கமேடு மலை அடிவாரத்தில் ஆம்புலன்ஸ் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டது.

மலையடிவாரத்தை அவர்கள் வந்தடைந்ததும் 108 ஆம்புலன்சில் அனிதாவுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் ஊசூர் அரசு ஆரம்ப சுகாதார மையத்திற்கு ஆம்புலன்சில் அழைத்து செல்லப்பட்டு, அங்கு அனிதாவுக்கு சுகப்பிரசவத்தில் அழகான பெண் குழந்தை பிறந்தது. பின்னர் தாய் மற்றும் குழந்தை 2 பேரும் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அத்தியூர் ஊராட்சிமன்ற தலைவர் அண்ணாமலையின் சமயோசித முயற்சிக்குபொதுமக்கள் பாராட்டினர். 

Tags:    

Similar News