தனிநபர் பாதை ஆக்கிரமிப்பு: மூதாட்டியை டோலிகட்டி தூக்கிச்சென்ற உறவினர்கள்.
அணைக்கட்டு அருகே தனிநபர் பாதையை ஆக்கிரமித்தத்தால், உடல்நலமில்லா மூதாட்டியை பல கிலோமீட்டர் டோலி கட்டி தூக்கிச்சென்ற உறவினர்கள்
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த அப்புக்கல் கிராமம் மானியகொல்லை பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் உள்ள கானாற்று ஓடையை அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக பாதையாக பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், ஓடையின் அருகே நிலம் வைத்துள்ள தனி நபர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஓடை வழியை ஆக்கிரமித்துள்ளார். இதனால் அப்பகுதி மக்கள் வேறு வழியில் பல கிலோ மீட்டர் தூரம் சுற்றிக்கொண்டு சென்று வருகின்றனர்.
இந்நிலையில், அப்பகுதியை சேர்ந்த சின்னகண்ணு ( 65 ) என்பவர் நிலத்திற்கு செல்லும் போது, தடுமாறி விழுந்ததில் காலில் முறிவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து , சின்னகண்ணுவை அவரது உறவினர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முயன்றனர். அப்போது, ஓடை வழி பாதை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் வாகனங்கள் வர முடியவில்லை. இதனால் மூதாட்டியை டோலி கட்டி கொல்லை மேடு வரை தூக்கி வந்தனர். பின்னர், அங்கு தயாராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோவில் ஏற்றி கொண்டு மருத்துவமனைக்கு சென்றனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் கானாற்று ஓடை ஆக்கிரமிப்பால் செல்ல வழியின்றி பல இன்னல்களை சந்தித்து வருகிறோம். வழி பிரச்னையால் அவசர காலத்தில் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் கூட எங்கள் கிராமத்திற்கு வருவதில்லை. இதனால் முடியாதவர்களை வேறு வழியின்றி கொல்லைமேட்டில் இருந்து வாகனங்கள் நிற்கும் இடம் வரைதூக்கி செல்கிறோம். இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர் .