வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த நெடுஞ்சாலைத்துறை ஆய்வாளர் மீது வழக்கு

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த அணைக்கட்டு நெடுஞ்சாலைத்துறை ஆய்வாளர் மீது வேலூர் லஞ்ச ஒழிப்புப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு

Update: 2021-07-19 05:09 GMT

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியில் நெடுஞ்சாலைத்துறை ஆய்வாளராக பணியாற்றி வருபவர் ரஞ்சித்குமார். இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக வேலூர் லஞ்ச ஒழிப்புப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன் எதிரொலியாக ரஞ்சித்குமாரின் நடவடிக்கைகளை லஞ்ச ஒழிப்பு போலீசார் கண்காணித்து விசாரணை மேற்கொண்டனர். அதில், அவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து கடந்த 2-ந் தேதி வேலூரை அடுத்த ஜி.ஆர்.பாளையம் நேதாஜி நகரில் உள்ள ரஞ்சித்குமாரின் வீட்டில் லஞ்ச ஒழிப்புப்பிரிவு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வீட்டில் இருந்த 35 பவுன் நகை, ரூ.60 ஆயிரம், 10 சொத்து ஆவணங்கள் வருமானத்துக்கு அதிகமாக இருந்தன. இதனையடுத்து அவற்றை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக ரஞ்சித்குமார் மற்றும் அவரின் மனைவியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் சொத்து ஆவணங்களை கைப்பற்றி குடும்பத்தினர் வருமானம் மற்றும் அனைத்து வரவு, செலவுகள் கணக்கெடுக்கப்பட்டது. அதில், ரஞ்சித்குமார் வருமானத்துக்கு அதிகமாக ரூ.93 லட்சத்து 18 ஆயிரத்து 92-க்கு சொத்து சேர்த்தது தெரிய வந்தது. இது அவரது வருமானத்தை விட 272 சதவீதம் கூடுதலாகும். இதையடுத்து வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ரஞ்சித்குமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Tags:    

Similar News