திருவண்ணாமலையில் முழு ஊரடங்கால் சாலைகள் வெறிச்சோடியது
திருவண்ணாமலை மாவட்டத்தில் முழு ஊரடங்கால் சாலைகள் வெறிச்சோடியது
முழு ஊரடங்கு இன்று அமுலில் உள்ள நிலையில் திருவண்ணாமலையில் உள்ள பல திருமண மண்டபங்களில் சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு திருமணம் நடைபெற்றது. திருவண்ணாமலையில் இன்று 50-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றன.
முன்னதாக நேற்று மாலை வரவேற்பு நிகழ்ச்சிகள் நடந்தது. கொரோனா விதிமுறைகள் காரணமாக ஆடம்பரமாக நடைபெறும் திருமணங்கள் மிகவும் எளிமையாக நடைபெற்றன. உறவினர்கள் வருகையும் குறைவாகவே இருந்தது.
திருவண்ணாமலையில் கடந்த வாரத்தை விட இன்று மக்கள் நடமாட்டம் ஓரளவு காணப்பட்டது. இன்று திருமண விழாக்கள், கோவில் கும்பாபிஷேகங்கள் என பல விழாக்கள் திருவண்ணாமலையில் இன்று நடைபெற்றது.
எனவே காவல் துறையினரும் மதியம் வரை அதிக அளவு கட்டுப்பாடுகளை விதிக்காமல் பொதுமக்களை ஒழுங்குபடுத்தி, விசாரித்து அனுப்பி வைத்தனர். பின்பு மதியத்திற்கு மேல் தடுப்புகள் அமைத்து ரோந்து பணியில் ஈடுபட்டு தடையை மீறி சுற்றித் திரியும் நபர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
ஆரணியில் முழு ஊரடங்கை மீறி வெளியில் சுற்றியவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. முழு ஊரடங்கை யொட்டி ஆரணியில் காந்தி ரோடு, எஸ்.எம். ரோடு உள்ளிட்ட முக்கிய வீதிகளில் கடைகள் அடைக்கபட்டதால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
மேலும் ஆரணி டவுன் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜ் தலைமையில் போலீசார் பழைய பஸ்நிலையம் அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டடனர். அப்போது தடையைமீறி சுற்றி திரியும் வாகன ஓட்டிகளின் வாகனத்தை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனர். பறிமுதல் செய்த வாகனங்களை அதன் உரிமையாளர்கள் தங்களின் ஆவணங்களை சமர்ப்பித்து நாளை வாகனங்களை திரும்பப் பெற்று கொள்ளலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.
ஆரணி பைபாஸ் சாலை அருகில் தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டு இருந்தன. பைபாஸ் சாலை வழியாக அனைத்து வாகனங்களும் திருப்பி விடப்பட்டன.
கீழ்பென்னாத்தூரில் காய்கறி, மளிகை, இறைச்சிகடைகள், டீக்கடைகள், நகைக்கடைகள் என அனைத்தும் மூடப்பட்டு இருந்தன. சாலைகள் வாகன நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. பெட்ரோல் பங்க், மருந்து, பால்கடைகள் திறந்து இருந்தன. கீழ்பென்னாத்தூர் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.