குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் வருகிற 27ந் தேதி 2048 இடங்களில் நடக்கிறது;

Update: 2022-02-24 14:05 GMT

காட்சி படம் 

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், 

போலியோ எனப்படும் இளம்பிள்ளைவாத நோயை நாட்டில் அறவே ஒழிக்கும் வகையில் 1995-ம் ஆண்டு முதல் 27 ஆண்டுகளாக தீவிர முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. போலியோ சொட்டு மருந்து முகாம் மூலம் நம் நாட்டில் பெருமளவில் போலியோ நோய் பாதிப்பு  குறைந்து தற்சமயம் அந்நோயை முற்றிலும் ஒழிப்பதற்கான இறுதி கட்டத்தில் உள்ளோம்.

இந்த ஆண்டு வருகிற 27-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது. 5 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் முன்னரே போலியோ சொட்டு மருந்து அளித்து இருப்பினும் வருகிற 27-ந் தேதியன்று இலவசமாக சொட்டு மருந்து அளிக்கப்பட உள்ளது. 

கொரோனா காலம் என்பதால் போலியோ சொட்டு மருந்து முகாமிற்கு பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அழைத்து வரும்போது முக கவசம் அணிந்து வருவதுடன் சமூக இடைவெளியும் அவசியம் கடைபிடிக்க வேண்டும்.

திருவண்ணாமலை மாவட்டம் முழுவதிலும் 2048 முகாம்களில் 8055 பணியாளர்கள் மூலமாக இம்முகாம் செயல்பட உள்ளது. இவர்கள் முகாம் நடைபெறும் நாள் அன்று அந்தந்த முகாம்களிலேயே குழந்தைகளுக்கு சொட்டு மருந்து அளிப்பார்கள். மறுநாள் முதல் பணியாளர்கள் வீடு, வீடாகச் சென்று விடுபட்ட குழந்தைகளுக்கு வீட்டிலேயே சொட்டு மருந்து அளிப்பார்கள்.

இப்பணியில் கிராம சுகாதார செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.  முகாம்கள் மற்றும் வீடுகளில் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்குவதுடன் ரெயில் நிலையம், பேருந்து நிலையம், திரையரங்குகள், தங்கும் விடுதிகள் போன்ற இடங்களில் நடமாடும் முகாம் மூலம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

ஒரு குழந்தை கூட விடுபடாமல் அனைத்து குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 5 வயதுக்கு உட்பட்ட 2 லட்சத்து 23 ஆயிரத்து 474 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.

எனவே பொதுமக்கள் இந்த அரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்டு தங்கள் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுத்து போலியோ நோயினை ஒழிப்பதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். , என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News