கஞ்சாவை அறவே ஒழிக்க உதவுவோருக்கு பரிசு: எஸ்பி பவன்குமார்
கஞ்சாவை அறவே ஒழிக்க உதவிடுவோருக்கு சன்மானம் மற்றும் புத்தகங்கள் பரிசாக வழங்கப்படும் என எஸ்பி பவன்குமார் தெரிவித்துள்ளார்;
திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை சார்பில் கஞ்சா மற்றும் போதை பொருட்களை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மாவட்டத்தில் நடைபெறும் குற்றங்கள் குறித்து பொதுமக்கள் ரகசிய தகவல் தெரிவிக்க 99885 76666 என்ற செல்போன் எண் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து எஸ்பி பவன்குமார் கூறுகையில், கஞ்சா, குட்கா கடத்தல் மற்றும் சட்ட விரோத செயல்கள் குறித்து தகவல் தெரிவிக்கலாம். செல்போன் மூலம் தகவல் தெரிவிக்க விரும்பாதவர்கள் 'வாட்ஸ் அப்' மூலம் கஞ்சா, குட்கா விற்பனை செய்யும் இடம் மற்றும் குற்றவாளிகள் குறித்து தகவல் அனுப்பலாம். தகவல் தெரிவிப்பவர்கள் அடையாளம் ரகசியம் காக்கப்படும்.
தெரிவித்த தகவலின் அடிப்படையில் 10 கிலோ மற்றும் அதற்கு மேல் கஞ்சா கைப்பற்றப்பட்டால் ரூ.5 ஆயிரம் சன்மானம் வழங்கப்படும்.
கல்லூரி வளாகம், பள்ளி வளாகம் மற்றும் இதர கல்வி நிறுவனங்களில் கஞ்சாவை அறவே ஒழிக்க உதவிடுவோருக்கு சன்மானம் மற்றும் புத்தகங்கள் பரிசாக வழங்கப்படும். மேலும் அவர்கள் பெயர், புகைப்படம் மற்றும் இதர அடையாளங்கள் ரகசியமாக இருக்கும் என தெரிவித்தார்.