போளூர் அருகே ஏரிக்கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி பொதுமக்கள் மறியல்

போளூர் அருகே ஆத்துரை கிராமத்தில், ஏரிக்கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி பொதுமக்கள் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2021-11-22 05:59 GMT

மறியலில் ஈடுபட்ட கிராம மக்களுடன் பேச்சு நடத்திய, சேத்துப்பட்டு தாசில்தார் கோவிந்தராஜ், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிமாறன். 

சேத்துப்பட்டு தாலுகா ஆத்துரை கிராமத்தில் உள்ள பெரிய ஏரி,  மழையால் நிரம்பி உபரிநீர் வெளியேறுகிறது. உபரிநீர் வெளியேற கால்வாய் உள்ளது. ஆனால், கால்வாயை ஒரு சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் கால்வாயில் உபரிநீர் செல்ல வழியில்லாததால், ஊருக்குள் புகுந்தது. அத்துடன் ஊரையொட்டி உள்ள விவசாய நிலங்களில் சாகுபடி செய்துள்ள பயிர்களை, வெள்ளம்  சூழ்ந்துள்ளது.

இந்நிலையில், ஆத்துரை கிராம மக்கள் திரண்டு வந்து தேவிகாபுரம்-அவலூர்பேட்டை சாலையில் ஒரு பனைமரம் குறுக்கே விழுந்து கிடந்த இடத்தில் அமர்ந்து,   திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஏரிக்கால்வாய் ஆக்கிரமிப்பை மீட்டு தூர்வார வேண்டும், என, அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

தகவல் அறிந்ததும், சேத்துப்பட்டு தாசில்தார் கோவிந்தராஜ், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் விரைந்து வந்து, சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். ஏரிக்கால்வாயை யார் ஆக்கிரமித்து இருந்தாலும் உடனே மீட்டு தூர்வாரப்படும், எனக் கூறினர். இதையடுத்து கிராம மக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்தச் சாலை மறியலால்,  அங்கு அரைமணிநேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. 

தாசில்தார் கோவிந்தராஜ் கூறுகையில், ஆத்துரை கிராமத்தில் உள்ள பெரிய ஏரி, கிராமப் பஞ்சாயத்துக்கு உட்பட்டதாகும். இதுதொடர்பாக சேத்துப்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆத்துரை ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீர் கால்வாய் மூலம் தச்சாம்பாடி ஏரிக்கு செல்லும். அந்தக் கால்வாய் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளதால் உபரிநீர் தாச்சாம்பாடி ஏரிக்கு செல்ல வாய்ப்பில்லை. எனினும், உடனே கால்வாய் ஆக்கிரமிப்பு அகற்றப்படும் என்றார். அகற்றுகிறேன், என்றார். அத்துடன், பொக்லைன் எந்திரத்தை வரவழைத்து, ஆத்துரை கால்வாயில் ஒருசில இடங்களில் தூர்வாரி, ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News