திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏரிகள் பாதுகாப்பு குழு அமைப்பு

திருவண்ணாமலையில் பெரும்பாலான ஏரிகள் நிரம்பியுள்ளதால், பாதிப்பைத் தடுக்க ஏரிகள் பாதுகாப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது;

Update: 2021-11-30 08:01 GMT

திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷ்

திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்யும் கனமழையால் 1605 ஏரிகள் முழுமையாக நிரம்பி இருக்கிறது. இந்த ஆண்டு வழக்கத்தை விட வடகிழக்கு பருவமழை 70 சதவீதம் கூடுதலாக பெய்திருக்கிறது. ஏரிகளை தொடர்ந்து கண்காணிக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் முருகேஷ் உத்தரவிட்டுள்ளார்.

ஏரி கரைகள் பலவீனமாக உள்ளதா என கண்டறிந்து அந்த பகுதிகளில் முன்னெச்சரிக்கையாக மணல் மூட்டைகளை கையிருப்பில் வைத்திருக்க வேண்டுமென தெரிவித்துள்ளார். மேலும் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளின் பாதுகாப்புக்காகவும் ஆக்கிரமிப்புகள் ஏற்படுவதை தவிர்க்கவும் ஏரி பாதுகாப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

அதன்படி 697 ஏரிகளுக்கு தனித்தனியே குழு அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஏரிக்கும் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர்,  கிராம நிர்வாக அலுவலர்,  ஊராட்சி மன்ற தலைவர், சம்பந்தப்பட்ட கிராமத்தை சேர்ந்த ஒருவர் மற்றும் மகளிர் சுய உதவி குழுவை சேர்ந்த ஒருவர் என ஏரி பாதுகாப்பு குழுவில் இடம் பெறுவர்.

ஏரி பாதுகாப்பு குழுவில் இடம் பெற்றுள்ளவர்கள் விபரங்கள் திருவண்ணாமலை மாவட்ட இணையதளத்தில் http://tiruvannamalai.nic.in/  வெளியிடப்பட்டுள்ளது.

இந்தக் குழுவினர் தொடர்ந்து ஏரி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags:    

Similar News