திருவண்ணாமலை மாவட்டத்தில் உர விற்பனை கண்காணிப்பு மையம் தொடக்கம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் உர விற்பனை கண்காணிப்பு மையம் தொடங்கப்பட்டுள்ளது. அதிக விலைக்கு உரம் விற்றால் இங்கு புகார் அளிக்கலாம்;
திருவண்ணாமலை மாவட்டத்தில் உர விற்பனை கண்காணிப்பு மையம் தொடங்கப்பட்டுள்ளது. கூடுதல் விலைக்கு உரம் விற்றால் இந்த மையத்தில் புகார் அளிக்கலாம் என ஆட்சியர் அறிவித்துள்ளார். இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டத்திற்கும் சென்னை உர விநியோக திட்ட வேளாண்மை இயக்குனரால் ஒவ்வொரு மாதமும் உரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து உரங்கள் கொள்முதல் செய்யப்படுகிறது. இவை சில்லரை உர விற்பனை நிலையங்கள் மூலம் மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைப்படி நேரடி நன்மை பரிமாற்றம் (டி.பி.டி.) முறையில் விவசாயிகளுக்கு விற்பனை முனைய (பாயிண்ட் ஆப் சேல்ஸ்) எந்திரம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.
முறைகேடுகளை தவிர்க்க விவசாயிகளின் ஆதார் எண்ணும் பெறப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. உர விற்பனை நிலையங்களில் உரங்கள் விற்பனை மேற்கொள்ளப்படும்போது உரக்கட்டுப்பாட்டு சட்டத்துக்கு புறம்பாக விற்பனை செய்தல் மற்றும் அரசு நிர்ணயம் செய்த விலையை விட கூடுதலாக விற்பனை செய்தல் முதலியவற்றை கண்காணித்திட மாவட்ட அளவில் கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டு உள்ளது.
தற்போது 45 கிலோ எடை கொண்ட யூரியா ஒரு மூட்டை ரூ.266.50 க்கும், 50 கிலோ எடை கொண்ட டி.ஏ.பி. ஒரு மூட்டை ரூ.1,200 க்கும் 50 கிலோ கிராம் கொண்ட மியூரட் ஆப் பொட்டாஷ் உரம் ரூ.1,015 க்கும் விற்க அரசு விலை நிர்ணயம் செய்துள்ளது.
எனவே மாவட்ட மற்றும் வட்டார அளவில் உரங்கள் விற்பனை குறித்த புகார்களை திருவண்ணாமலை வேளாண்மை உதவி இயக்குனர் தரக்கட்டுப்பாடு பிரிவுக்கு 99769 71441 என்ற செல்போன் எண்ணிலும், திருவண்ணாமலை வேளாண்மை அலுவலர் தரக்காட்டுப்பாடு பிரிவில் 85267 68539 என்ற எண்ணுக்கும் ஆட்சியரின் நேர்முக உதவியாளரை (வேளாண்மை) 99439 83897 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என தெரிவித்து உள்ளார்.