நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒட்டி அனைத்து கட்சி கூட்டம்

ஆரணி மற்றும் செய்யாறில் தேர்தல் நடத்தும் அதிகாரி தலைமையில் அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது

Update: 2022-01-31 07:15 GMT

ஆரணி நகராட்சி வளாகத்தில் அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது

தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகின்ற 19ஆம் தேதி நடைபெற உள்ளது.  இந்நிலையில் ஆரணி நகராட்சி வளாகத்தில் நகராட்சி ஆணையாளர், தேர்தல் நடத்தும் அலுவலருமான தமிழ்ச்செல்வி தலைமையில் அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

ஆலோசனைக் கூட்டத்தில் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய அலுவலகத்திற்கு வரும்போது முன்மொழிய இரண்டு நபர்களை மட்டுமே அழைத்துவர வேண்டும்,   கண்டிப்பாக நகராட்சி அலுவலகத்திற்கு வரும் போது முக கவசம் அணிந்து தான் வர வேண்டும். வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கக்கூடாது.  வாக்கு சேகரிக்க செல்லும்போது 5 நபர்களுக்கு மேல் செல்லக்கூடாது, பொதுக்கூட்டங்கள் நடத்த கூடாது என ஆலோசனைகளை ஆணையாளர் வழங்கினார்.

அதேபோல் செய்யாறில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒட்டி அனைத்து கட்சி கூட்டம் அதிகாரிகள் தலைமையில் நடந்தது.

செய்யாறு நகராட்சி அலுவலகத்தில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான அனைத்து கட்சி ஆலோசனை கூட்டத்திற்கு தேர்தல் நடத்தும் அலுவலர் கி.ரகுமாரன் தலைமை தாங்கினார். டிஎஸ்பி செந்தில், இன்ஸ்பெக்டர் பாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அனைத்து கட்சி பிரதிநிதிகள் 25க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

அப்போது தேர்தல் நடத்தும் அலுவலர் ரகுராமன் பேசியதாவது: கொரோனா வைரஸ் தொற்று அதிகளவில் பரவுவதால், தேர்தல் நடத்துவது சவாலானா ஒன்று. தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ள ஆலோசனைப்படி அனைவரும் விதிமுறைகளைப் பின்பற்றி நடக்க வேண்டும். மேலும், வேட்பு மனு தாக்கல் அளிக்க வரும்போது வேட்பாளரும், முன்மொழிபவர் மட்டுமே வரவேண்டும்.

அதேபோல் பிரசாரத்தின் போது வேட்பாளர் உடன் இருவர் மட்டுமே செல்ல வேண்டும். வேட்பாளர் இல்லாமல் யாரும் ஓட்டு கேட்கக் கூடாது. ஒட்டு கேட்கும் போது முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். கையுறை அணிந்து தான் துண்டு பிரசுரங்களை அளிக்க வேண்டும். வேட்பாளருக்கு கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டால், வாக்கு சேகரிக்க அவர் செல்லக்கூடாது. மாற்றாக டிவிட்டர், வாட்ஸ் அப் போன்ற சமூக வளைதளங்கள் மூலம் வாக்கு சேகரிக்கலாம். வேட்பாளருக்காக கட்சித் தலைவர் வந்தால் அவரது வாகனத்தில் வேட்பாளர் உடன் செல்லக்கூடாது.

மேலும், பொது இடங்களில் பொதுக் கூட்டம் நடத்திட தடை விதிக்கப்பட்டுள்ளது. கூட்டம் நடத்திட வேண்டும் என்றால் திருமண மண்டபம் போன்ற பெரிய கூடங்களில் நடத்திட முறையாக பொது சுகாதாரம் மற்றும் காவல் துறை அனுமதிப் பெற்ற பின்னரே கூட்டம் நடத்த வேண்டும். கூட்டம் நடக்கும்போது கிருமி நாசினி, கையுறை, சமூக இடைவெளி, முகக்கவசம் ஆகியவற்றை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். ஒலிபெருக்கி மற்றும் வாகனத்தில் சென்று வாக்கு சேகரிக்க தடைவிதிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News