ஐஸ்வர்யா ரஜினிகாந்தை விசாரிக்க திருவண்ணாமலை ஆட்சியர் உத்தரவு
பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் படப்பிடிப்பு நடத்தியதாக ஐஸ்வர்யாவிடம் விசாரணை நடத்த ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்
'லால் சலாம்' என்ற படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது இயக்கி வருகிறார். இதில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார். இப்படம் 2023-ஆம் ஆண்டு வெளியாகவுள்ளது.
இந்நிலையில் திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடிகர் விஷ்னு விஷாலை வைத்து, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இப்படத்தின் நீதிமன்ற வளாக காட்சிகள் திருவண்ணாமலையில் நேற்று படமாக்கப்பட்டன. அப்போது பொதுமக்களிடம் படக்குழுவின் பவுன்சர்கள் கடுமையாக நடந்து கொண்டதாகவும், வட்டாட்சியர் அலுவலகத்துக்கு பின்புறம் உள்ள அரசு விடுதிக்கு மாணவிகள் செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும், அலுவலகத்தில் உள்ள இ - சேவை மையத்துக்கும் பொதுமக்கள் செல்ல முடியாத வகையில் சுற்றி கயிறு கட்டியதாக கூறப்படுகிறது.இணை சார் பதிவாளர் அலுவலகம் செல்லும் பாதையில் இருந்த பெட்டிக் கடைகள் அகற்றப்பட்டன. படப்பிடிப்பு நடைபெறும் தகவல் பரவியதால், வட்டாட்சியர் அலுவலக வளாகத்துக்கு பொதுமக்கள் திரண்டனர். அப்போது அவர்கள், படப்பிடிப்பு காட்சிகளை தங்களது செல்போன்களில் வீடியோ மற்றும் படம் பிடித்தனர்.
இதையறிந்த பவுன்சர்கள், மக்களிடம் இருந்து செல்போன்களை பறித்து, அதில் பதிவாகி இருந்த புகைப்படங்களை டெலிட் செய்து அடாவடியில் ஈடுபட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மக்களுக்கு, புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க அனுமதி கிடையாது, மீறினால் செல்போன்களை பறிமுதல் செய்வோம் என ‘உள்ளூர் இடைத் தரகர்கள்’ மூலம் மிரட்டல் விடுத்தனர்.
இதையடுத்து, வட்டாட்சியர் அலுவலக நுழைவு பாதையில், கயிறு கட்டி தடுப்புகளை ஏற்படுத்தி, யாரும் செல்ல முடியாத வகையில் மக்களை பவுன்சர்கள் சிறைபிடித்தனர். இதனால், வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அரசு விடுதிகளுக்கு செல்ல முடியாமல் மாணவிகள் தவித்தனர். இதேபோல், வட்டாட்சியர் அலுவலகம், இ-சேவை மையத்தை தேடி வந்த மக்களும், ஊழியர்களும் அவதிப்பட்டனர்.
இந்தப் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பாகவே, வட்டாட்சியர் அலுவலக கதவுகளை மூட முயன்றதால், உழவர் சந்தைக்கு சென்ற விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் படப்பிடிப்பு நடத்தியதாக ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் படக்குழுவிடம் விசாரணை நடத்த மாவட்ட கோட்டாட்சியர் மந்தாகினிக்கு ஆட்சியர் முருகேஷ் உத்தரவிட்டுள்ளார்.