ஆரணியில் கல்லூரி மாணவர்கள் திடீர் சாலை மறியல்

கூடுதல் பேருந்து இயக்காததை கண்டித்து ஆரணியில் கல்லூரி மாணவர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்

Update: 2022-03-16 13:49 GMT

ஆரணியில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்களை சமரசம் செய்து அனுப்பும் போலீசார் 

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் இருந்தும், சுற்று வட்டாரப் பகுதியில் இருந்தும் செய்யாறில் உள்ள அரசு அறிஞர் அண்ணா கலைக்கல்லூரிக்கு தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் சென்று படித்து வருகின்றனர். மாணவ-மாணவிகளுக்கு அரசு பஸ்களில் இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டுள்ளதால் பஸ்களில் பயணம் செய்யும் மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. 3 பஸ்களில் பயணம் செய்யக்கூடிய மாணவ-மாணவிகள் ஒரே பஸ்சில் செல்லக்கூடிய நிலை ஏற்படுகிறது.

இதுகுறித்து பலமுறை மாணவ-மாணவிகள் போராட்டம் நடத்தியும் போக்குவரத்துத்துறை சரியான நடவடிக்கை எடுக்காமல் இருந்து வருகிறது. கடந்த மாதம் ஏற்பட்ட பிரச்சினையால் பெண்களுக்காக தனியாக பஸ் இயக்கப்பட்டது. அந்தப் பஸ் இன்று வரை இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் மாணவர்கள் அடிக்கடி பிரச்சினை செய்து வருகின்றனர்.

இந்தநிலையில்  இன்று செய்யாறு செல்லக்கூடிய அரசு பஸ்சில் அளவுக்கு அதிகமாக கல்லூரி மாணவர்கள் ஆரணி பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றனர். காந்தி ரோட்டில் மாரியம்மன் கோவில் அருகே சென்றபோது, படியில் பயணம் செய்த மாணவர்களில் ஒரு சிலர் கீழே விழுந்ததாகத் தெரிகிறது. இதனால் படியில் தொங்கி வந்த மாணவர்கள் திடீரெனச் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் ஆரணி டவுன் காவல் உதவி ஆய்வாளர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மாணவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி குறிப்பிட்ட எண்ணிக்கையில் மாணவர்களை அந்தப் பஸ்சில் அனுப்பி வைத்தனர். மற்ற மாணவர்களை வேறொரு பஸ்சில் அனுப்பி வைத்தனர்.

ஆரணியில் இருந்து செய்யாறு கல்லூரிக்கு செல்லும் மாணவர்களுக்காக காலை, மாலை நேரத்தில் கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News