செய்யாறு அருகே சரக்கு ஆட்டோவில் ஆபத்தான முறையில் மாணவிகள் பயணம்
செய்யாறு அருகே சரக்கு ஆட்டோவில் ஆபத்தான முறையில் பள்ளி மாணவிகள் பயணம் செய்தனர்.;
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா அம்மாபாளையம் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் செங்காடு, தவசி, இருங்கல், கீழ்மட்டை, விளாநல்லூர், கிருஷ்ணாபுரம், கருவேல்பட்டு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 550-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.
பேருந்துகளில் பள்ளிக்கு வரும் மாணவ-மாணவிகள் பள்ளியை விட்டு வீடு திரும்பும் மாலை நேரத்தில் பேருந்து வசதி இல்லாததால் அந்த வழியாக செல்லும் வாகனங்களில் மாணவ-மாணவிகள் லிப்டு கேட்டு வீட்டிற்கு செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் நேற்று மாலை பள்ளியில் இருந்து வீடு திரும்பிய மாணவிகள் செய்யாறு நோக்கி சென்ற சரக்கு ஆட்டோவில் வாகனத்தில் வீட்டிற்கு சென்றனர்.
வாகனத்தில் உள்ளே இடம் இருந்தும் உள்ளே நின்று பயணம் செய்யாமல் வாகனத்தின் கம்பியை பிடித்துக் கொண்டு கதவின் வெளியே நீட்டிக் கொண்டு இருக்கும் கம்பி மீது நின்று கொண்டு சாகசம் செய்தவாறே பயணம் செய்தனர்.
அதனை கண்ட இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவர் மாணவிகளை உள்ளே செல்லும்படி எச்சரிக்கை செய்தும் ஒரு சில மாணவிகள் மட்டுமே உள்ளே செல்ல மற்ற மாணவிகள் உள்ளே செல்லாமல் வெளியே நின்று பயணம் செய்தனர்.
அதில் ஒரு மாணவியோ ஒரு கையை மட்டுமே கம்பியை பிடித்துக் கொண்டு ஒரு கையை தொங்கவிட்டுக் கொண்டு ஆபத்தான சாகச பயணம் செய்வதை அந்த வழியாக சென்றவர்கள் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டு உள்ளனர்.
ஆபத்தை உணராமல் மாணவிகள் இப்படி பயணம் செய்வதை தடுக்க மாணவிகளுக்கு ஆசிரியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், பெற்றோரும் தங்கள் பிள்ளைகள் பள்ளிக்கு எவ்வாறு பாதுகாப்பாக சென்று வருகின்றனர் என கண்காணிக்க வேண்டும். மேலும் பள்ளி நேரங்களில் காலை மாலை இரு வேலைகளிலும் மாணவர்கள் பயணிக்க பேருந்துகளை இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
அதேபோல் திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு- ஆற்காடு சாலையில் அரசு கலைக் கல்லூரி இயங்கி வருகிறது.
செய்யாறில் தனியார் ஐடிஐ ,அரசு தொழில்நுட்பக் கல்லூரி, அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த கல்லூரி மற்றும் பள்ளிகளில் சுற்றுப்பகுதி கிராமங்களில் இருந்து ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். அனைத்து கல்வி நிலையங்களும் மாலை ஒரே நேரத்தில் முடிவடைவதால் ஆரணி பகுதிகளில் இருந்து வரும் மாணவ, மாணவிகள் பேருந்தில் போட்டி போட்டுக்கொண்டு ஏற்கின்றனர்.
பேருந்தின் உள்ளே இடம் இல்லாததால் படிக்கட்டுகளில், ஜன்னல் வழியே மாணவர்கள் ஆபத்தான முறையில் தொங்கி செல்லும் அவல நிலை உள்ளது. இதனால் விபத்து ஏற்படும் முன் அரசு போக்குவரத்து துறை மாணவர்களின் நலன் கருதி கூடுதலாக பேருந்துகளை இயக்க வேண்டும் என்று, பெற்றோர்கள் , பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.