காவல்துறை பாதுகாப்புடன் மாலையில் நடந்த கிராமசபை கூட்டம்
செய்யாறு அருகே தலைவர், உறுப்பினர்கள் வராததால் காலையில் நடைபெற இருந்த கிராமசபை கூட்டம் மாலையில் காவல்துறை பாதுகாப்புடன் நடந்தது.;
செய்யாறு தாலுகா இளநீர்குன்றம் கிராம ஊராட்சியில் 6 வார்டுகள் உள்ளன. இதில் பலராமன் தலைவராகவும், சங்கீதா துணைத்தலைவராகவும் உள்ளனர்.
இந்த ஆண்டு கிராமசபை கூட்டத்தை ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் நடத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து இருந்தனர். அதற்கு அனக்காவூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஹரி சுழற்சி முறையில் நடத்தப்படும் என கூறியிருந்தார்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கிராம சபை கூட்டம் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் நடத்தப்படும் என்று கிராமம் முழுவதும் நோட்டீஸ் ஒட்டப்பட்டு பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் நேற்று கிராம சபை கூட்டத்தை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன. காலை 11 மணியளவில் மக்களும் தயாராக இருந்தனர். ஆனால், ஊராட்சி மன்றத் தலைவர் பலராமன், துணைத் தலைவர் சங்கீதா மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் யாரும் வரவில்லை.
கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட இடத்துக்கு வந்திருந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஹரி, குப்புசாமி ஆகியோர் தலைவர் உள்ளிட்டவர்கள் வராததால் கிராம சபை கூட்டத்தை ரத்து செய்வதாக அறிவித்துவிட்டு புறப்பட்டு சென்றனர்.
இதனால், அதிருப்தி அடைந்த பட்டியலின மக்கள், “எங்கள் பகுதியில் கிராம சபை கூட்டத்தை நடத்த தலைவர் உள்ளிட்டவர்கள் விரும்பவில்லை. இதற்கு, அதிகாரிகளும் துணையாக உள்ளனர். அதனால்தான், எங்கள் பகுதியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட கிராம சபை கூட்டத்தை நடத்தாமல் ரத்து செய்துள்ளனர்” என்றனர்.
இதையடுத்து கிராம சபை கூட்ட ஏற்பாடுகளை சரிவர செய்யவில்லை என ஊராட்சி செயலாளர் துலுக்கானம் மீது நடவடிக்கை எடுக்க வட்டார வளர்ச்சி அலுவலர் ஹரி முடிவு செய்ததாக கூறப்படுகிறது.
இதன் எதிரொலியாக கூட்டத்தை நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. பின்னர், பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் காவல் துறையினர் பாதுகாப்புடன் மாலை 4 மணியளவில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி மன்றத் தலைவர் பலராமன், துணைத் தலைவர் சங்கீதா, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கீதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டம் தொடங்கியதும் அப்பகுதி பொதுமக்கள் காலை அறிவித்தபடி 11 மணியளவில் கூட்டம் ஏன் நடத்தவில்லை, கூட்டத்தில் விவாதிக்கப்பட வேண்டிய பதிவேடுகளை ஏன் கொண்டு வரவில்லை என அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து ஊராட்சி தலைவர் பேசுகையில், தனக்கு உடல்நிலை சரியில்லை என ஏற்கனவே தெரிவித்து விட்டேன் என்றார். தொடர்ந்து ஊராட்சி செயலாளர் துலுக்கானம் பொது மக்களின் கோரிக்கையை கேட்டறிந்து தீர்மான பதிவேட்டில் பதிவு செய்தார்.
கூட்டத்தில் இளநீர் குன்றம் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்தல், டாக்டர் அம்பேத்கர் இரவு பாடசாலை அமைத்தல், நடமாடும் ரேஷன் கடை அமைத்தல், சிப்காட் விரிவாக்கத்திற்கு இளநீர் குன்றம் ஊராட்சி பகுதியில் விவசாய நிலம் எடுக்க அனுமதிக்க மாட்டோம். இளநீர் குன்றம் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் மினி டேங்க் அமைத்தல், விளையாட்டு உபகரணங்கள் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தீர்மானங்கள் நிறைவேறிய பிறகு கூட்டம் முடிந்தவுடன் போலீசார் மற்றும் அதிகாரிகள் அங்கிருந்து கிளம்பி சென்றனர்.