திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்..!
திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிமுக சார்பில் அக். 4 ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.;
திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிமுக சார்பில் 4 ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருவண்ணாமலை மாவட்டம் வடக்கு பகுதியை சேர்ந்த செய்யாறு சட்டமன்ற தொகுதி அனக்காவூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட 9 ஊராட்சிகளை சேர்ந்த சுமார் 3300 ஏக்கர் பரப்பளவு கொண்ட விவசாய விளை நிலங்களை சிப்காட் தொழிற் பூங்கா விரிவாக்கம் என்ற பெயரில் கையகப்படுத்துவதற்கான செயலில் திமுக அரசு இறங்கியுள்ளது.
இந்த செயல் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை சீர்குலைப்பதாக அமைந்துள்ளது. இதற்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை சிதைக்கும் செயலில் ஈடுபட்டுள்ள திமுக அரசைக் கண்டித்தும்; விவசாய நிலங்களை கையகப்படுத்தும் முடிவை உடனடியாக திரும்பப்பெற வலியுறுத்தியும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக திருவண்ணாமலை வடக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில், 4.10.2023- புதன் கிழமை காலை 10.30 மணியளவில், அனக்காவூர் கிழக்கு ஒன்றியம், மேல்மா கூட்டு ரோடு என்ற இடத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சேவூர் இராமச்சந்திரன், கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான முக்கூர் சுப்பிரமணியன் ஆகியோர் தலைமையிலும்;
திருவண்ணாமலை வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் தூசி மோகன், கழக வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளரும், கழக செய்தித் தொடர்பாளருமான பாபுமுருகவேல், ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், திருவண்ணாமலை வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களும், கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ள வேண்டும்.
விவசாயப் பெருங்குடி மக்களின் வாழ்வாதாரத்தைக் காப்பதற்கும்; விவசாய விரோத செயல்களில் ஈடுபடும் திமுக அரசைக் கண்டித்தும் நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், பொதுமக்களும், விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் பெருந்திரளான அளவில் கலந்துகொண்டு ஆதரவு நல்கிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன், என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.