பேருந்து தினம் கொண்டாடிய 40 மாணவர்கள் மீது வழக்கு: 2 பேர் கைது
ஆரணியில் பேருந்து தினம் கொண்டாடிய 40 மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு 2 ஓட்டுநர்கள் கைது செய்யப்பட்டனர்.;
செய்யாறு அரசு கலைக் கல்லூரிக்கு அரசு பேருந்துகளிலும், தனியார் பஸ்களிலும் ஆரணியில் இருந்து தினமும் 500-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் சென்று படித்து வருகின்றனர்.
இவர்கள் நேற்று பேருந்து தினம் கொண்டாடினர். ஆரணி அடுத்த இரும்பேடு கூட்டு சாலையில் தனியார் பேருந்து மற்றும் சரக்கு வாகனத்தில் 40-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பஸ் தின கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்காக வாகனங்களை வாடகைக்கு எடுத்துள்ளனர். பேருந்து மற்றும் சரக்கு வாகனங்களில் ஆபத்தான முறையில் பயணித்தும் போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு செய்தனர். போலீசார் எச்சரித்து அறிவுறுத்திய பிறகும் பேருந்து தினத்தை மாணவர்கள் கொண்டாடினர்.
இதையடுத்து திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் ஆரணி டிஎஸ்பி ரவிச்சந்திரன் மேற்பார்வையில் ஆரணி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழ் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஷாபுதீன், அசோக்குமார், ஜெயபால் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.
சமூக வலைதளங்களில் பரவிய வீடியோவை கொண்டு பெயர் தெரிந்த 10 கல்லூரி மாணவர்கள் உள்பட 40 மாணவர்கள் மீது 7 பிரிவுகளின்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
மேலும் போக்குவரத்துக்கு இடையூறாகவும் பொதுமக்களை அச்சுறுத்த வகையில் சென்ற மினிவேன் டிரைவர் முள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சரவணன், தனியார் பேருந்து டிரைவர் ஆரணி பள்ளிக்கூடத் தெருவை சேர்ந்த தயாளன் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து தனியார் பேருந்து மற்றும் மினிவேனை பறிமுதல் செய்து மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மினிவேனுக்கு ரூ.7 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது, தனியார் பஸ்பேருந்து சுற்றுலா பேருந்து என்பதால் மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் எஸ்பி கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஆரணி அடுத்த இரும்பேடு பகுதியில் நேற்று செய்யாறு அரசு கலைக் கல்லூரி மாணவர்களும் திருவண்ணாமலை அடுத்த தீபம் நகரில் கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரி மாணவர்களும் பேருந்து தின கொண்டாட்டம் என்ற பெயரில் சாலையை மறித்து போக்குவரத்துக்கு இடையூறு செய்துள்ளனர்.
செய்யாறு, ஆரணி மற்றும் திருவண்ணாமலை தாலுகா போலீஸ் நிலையங்களில் தனித்தனியாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அமைதியான முறையில் பள்ளி மற்றும் கல்லூரிக்கு சென்று கல்வியில் கவனம் செலுத்த வேண்டும். மாணவர்கள் பேருந்து தின கொண்டாட்டத்தை டிரைவர், கண்டக்டர்கள் அனுமதிக்க கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளார்.