தமிழக பாஜகவின் வணிகர் பிரிவின் மாநில துணை தலைவர் நீக்கம்
தமிழக பாஜகவின் வணிகர் பிரிவின் மாநில துணைத் தலைவர், அந்தப்பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
திருவண்ணாமலை நகர்பகுதியை சேர்ந்தவர் தணிகைவேல். இவர், சென்னையில் வசித்து வருகிறார். கடந்த 2020 ஆம் ஆண்டு தமிழக பாஜகவின் முன்னாள் தலைவருமான தற்போது மத்திய இணை அமைச்சராக உள்ள முருகனின் ஆதரவுடன், அக்கட்சியில் இணைந்த தணிகைவேலுக்கு பாரதிய ஜனதா கட்சியின் வணிகர் பிரிவின் மாநிலத் துணைத் தலைவர் பதவி கிடைத்தது.
அதனைத்தொடர்ந்து தனக்கென தனி கோஷ்டி அமைத்துக்கொண்டு தணிகைவேல் அரசியல் செய்து வந்தார். இவருக்கு திருவண்ணாமலையில் உள்ள மாவட்ட நிர்வாகிகளுடன் ஒத்துபோகாததை அடுத்து மேல் இடத்துக்கு புகார்கள் அனுப்பபட்டது. திருவண்ணாமலையில் தணிகைவேலுடன் ஒரு கோஷ்டி மற்றும் மாவட்ட நிர்வாகிகளுடன் ஒரு கோஷ்டியும் தனித்தனியாக நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வந்தது.
மேலும் முருகனுடனான நெருக்கம் காரணமாக, திருவண்ணாமலை சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட தணிகைவேலுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. திமுகவைச் சேர்ந்த பொதுப் பணித்துறை அமைச்சராக உள்ள எ.வ.வேலுவை எதிர்த்து போட்டியிட்டு 94,673 வாக்குகள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தார்.
தேர்தல் பணியில் மெத்தனமாக செயல்பட்டது மற்றும் பாஜக கூட்டணி கட்சி நிர்வாகிகளை அரவணைத்துச் செல்லாமல் அதிகாரமிக்கவராக தன்னை பிரபலப்படுத்திக் கொண்டு, கட்சி தலைமைக்கு தவறான தகவல்களைக் கொடுத்தது போன்ற குற்றச்சாட்டுகளை அவர் மீது, அக்கட்சியினர் முன் வைத்தனர். இதற்கிடையில், திருவண்ணாமலையில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு சுற்றுப்பயணம் செய்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தணிகைவேலை நெருங்கவிடவில்லை. இதனால் அவர் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என பாஜக தரப்பில் கூறப்பட்டு வந்தது.
இந்த நிலையில், தமிழக பாஜகவின் வணிகர் பிரிவின் மாநில துணைத் தலைவர் பொறுப்பில் இருந்தும், அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் எஸ்.தணிகைவேல் நீக்கப்படுவதாக மாநில பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் நேற்று இரவு (2-ம் தேதி) அறிவித்துள்ளார்.
கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதால், மாநிலத் தலைவர் அண்ணாமலையின் ஒப்புதலுடன் நீக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். அவருடன் கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோர் கட்சி சார்ந்த தொடர்பை வைத்துக் கொள்ள வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார்.
இதனை தொடர்ந்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தணிகைவேல், கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக ஊடகங்கள் வாயிலாக வந்த செய்தி மூலமாகவே எனக்கு தெரியவந்தது. ஆனால் தனிப்பட்ட முறையில் இதுவரை கட்சி தலைமையில் இருந்து எனக்கு எந்த ஒரு தகவலும் வரவில்லை என்று தெரிவித்தார்.