ஆரணி அருகே சிறுமூர் வீர ஆஞ்சநேயர் கோவிலில் தேரோட்டம்
ஆரணி அருகே சிறுமூர் வீர ஆஞ்சநேயர் கோவிலில் நடந்த தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.;
ஆரணியை அடுத்த சிறுமூர் கிராமத்தில் உள்ள வீர ஆஞ்சநேயர் கோவிலில் பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக தேரோட்டம் நடைபெற்றது. இதனையொட்டி காலை ஸ்ரீராமர், லட்சுமணர், சீதை, ஆஞ்சநேயர் உற்சவர் சிலைகள் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருள செய்யப்பட்டது.
சிறப்பு பூஜைக்கு பின்னர் தேரோட்டம் தொடங்கியது. திரளான பக்தர்கள் தேரோடும் வீதிள் வழியாக தேரை வடம்பிடித்து இழுத்து சென்று வழிபட்டனர். தேர் கிராமம் முழுவதும் வலம் வந்தது.
சிறுமூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஆங்காங்கே பக்தர்கள் நேர்த்திக்கடனாக தேர் மீது உப்பு, பொரி உருண்டை, மிளகு, சாக்லேட், இனிப்பு போன்றவைகளை இறைத்து பரவசத்துடன் வழிபட்டனர். தேர் செல்லும் வழிநெடுகிலும் பக்தர்களுக்கு நீர்மோர், வெல்லநீர், குளிர்பானம் போன்றவற்றை வழங்கினர்.
காவல்துறையினர் , மின் வாரியம், தீயணைப்புத் துறையினர் தேரோடும் வீதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்