வெள்ள பாதிப்பில் இருந்து மீண்ட திருவள்ளூர் மாவட்டம் : ஆட்சியர் தகவல்

பொன்னேரி, பூந்தமல்லி, ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி, ஆவடி உள்ளிட்ட பகுதிகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டது;

Update: 2023-12-10 12:24 GMT

திருவள்ளூர் ஆட்சியர் பிரபு சங்கர் 

மிக்ஜம் புயல் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழை கொட்டித்தீர்த்தது. ஆவடி, திருநின்றவூர், பொன்னேரி, மீஞ்சூர், பழவேற்காடு பகுதியில் பலத்த வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. இந்த பகுதிகளில் வெள்ளநீர் வெளியேற்றப் பட்டு இயல்பு நிலை திரும்பி வருகிறது.

திருநின்றவூர் ரயில் நிலையம் அருகே உள்ள பெரியார் நகர், சுதேசி நகர் பகுதியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ள நீர் இன்னும் சூழ்ந்து உள்ளது. அருகில் உள்ள ஈசா ஏரி நிரம்பி தண்ணீர் குடியிருப்பு பகுதிக்குள் வந்து உள்ளது. இதனால் அப்பகுதியில் இன்னும வெள்ள நீர் வடியவில்லை. இடுப்பு அளவுக்கு மேல் உள்ள தண்ணீரில் அப்பகுதி மக்கள் தவித்து வருகிறார்கள். குடியிருப்பு பகுதியில் இருந்து வெளியே வரமுடியாமலும் அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாமலும் தவிக்கும் நிலை உள்ளது. கடந்த ஒரு வாரமாக அவர்கள் வெள்ளத்தில் தத்தளிக்கும் நிலை நீடித்து வருகிறது.

இந்நிலையில் அந்த பகுதியில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் குடியிருப்பு பகுதியில் தேங்கிய தண்ணீரை வெளியேற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

பின்னர் ஆட்சியர் பிரபுசங்கர் கூறுகையில், திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி, பூந்தமல்லி, ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி, ஆவடி உள்ளிட்ட தாலுகாக்கள் மற்றும் நகர்புற பகுதிகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் 50 ஆயிரம் ஹெக்டேர் சம்பா நெல் பயிர்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாக கணக்கெடுக்கப்பட்டு உள்ளது. பழவேற்காடு மீனவர்களின் படகுகள் மீன்பிடி உபகரணங்கள் கணக்கெடுக்கும் பணி முடிந்துள்ளது. கால்நடை உயிரிழப்பு மற்றும் 3 மனித உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளது.

மழையினால் பூண்டி, புழல் பகுதிகளிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் மற்றும் ஆரணி ஆற்று உபரி நீர் ஆகியவை தேங்கி வடியாமல் இருந்த இடங்களில் தற்போது தண்ணீர் வடிந்து உள்ளது.

மாவட்டம் முழுவதும் 172 முகாம்களில் 15 ஆயிரம் பேரை குறிப்பாக அதிகளவில் இருளர் இன மக்களை தங்க வைத்து தற்போது வரை உணவளித்து வருகி றோம். இதுவரை அதிகம் பாதித்த பகுதிகளில் சுமார் 5 ஆயிரம் பேருக்கு நிவாரணங்கள் வழங்கப்பட்டு உள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் 99 சதவீதம் இயல்புநிலை திரும்பி உள்ளது. மாவட்டத்தில் காக்களூர், திருநின்றவூர் அருகே பெரியார் நகர் சுதேசிநகர் பூந்தமல்லி உள்ளிட்ட ஒரு சில பகுதிகளில் மட்டும் தண்ணீர் தேங்கி நிற்கிறது.

மாவட்டம் முழுவதும் 150 மோட்டார்கள் வைக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இப்போது வரை தண்ணீர் வெளியேறாமல் இருப்பதற்கான வடிகால் இல்லாமல் கட்டப்பட்ட குடியிருப்புகள் மற்றும் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட குடியிருப்புகளால் இந்தப் பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.

மேலும் தேவையான இடங்களில் போர்க்கால அடிப்படையிலும் மற்ற இடங்களில் அரசின் விதி முறைகளை பின்பற்றியும் ஆக்கிரமிப்புகள் எடுக்கப்படும். நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகளை அகற்றினால் மட்டுமே நீர் வடியும் என்ற பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு உள்ளது.

மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளை தவிர 100 சதவீதம் மின்சாரம் வழங்கப்பட்டு உள்ளது. ஆரணி ஆற்றின் வெள்ளப் பெருக்கினால் வஞ்சிவாக்கம் பகுதியில் கரை உடைப்பு ஏற்படுவதால் அப்பகுதியில் நிரந்தர தீர்வு காண திட்ட அறிக்கை தயார் செய்து முடிக்கப்பட்டுள்ளது. விரைவில் அரசுக்கு சமர்ப்பித்து நிரந்தர தீர்விற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்

Tags:    

Similar News