திருவள்ளூர் அருகே கள்ளக்காதல் விவகாரம் வக்கீல் வெட்டி படுகொலை, காதலி உயிர் ஊசல்
திருவள்ளூர் அருகே கள்ளக்காதலில் ஈடுபட்ட வக்கீல் வெட்டி படுக்கொலை செய்யப்பட்டார். காதலி மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார்.;
திருவள்ளூரை அடுத்த வெள்ளரி தாங்கல் பகுதியை சேர்ந்தவர் வக்கீல் வெங்கடேசன். இவருக்கும் காக்களூர் ஆஞ்சநேயபுரம் பகுதியில் கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் சத்யா என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.
இவர்களின் கள்ளக்காதலை அறிந்த சத்யாவின் பெற்றோர் இருவரையும் கண்டித்தனர். ஆனால் இருவரும் காதலை தொடர்ந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து நேற்று இரவு சத்யாவின் பெற்றோர் 10 பேருடன் மகளின் கள்ளக்காதலை கண்டிக்க வந்துள்ளனர். அப்போது கள்ளக்காதலன் வக்கீல் வெங்கடேசும் வீட்டில் இருந்துள்ளார்.
இதனால் சத்யாவின் பெற்றோருக்கும் வெங்கடேசனுக்கு வாய்தகராறு ஏற்பட்டது. வாய்ச்சண்டை, கைகளப்பாக மாறியது. இதில் ஆத்திரம் அடைந்த சத்தியாவின பெற்றோர் மற்றும் அவருடன் இருந்தவர்கள் வெங்கடேசனை சரமாரி அரிவாளால் வெட்டினர்.
தடுக்க முயன்ற கள்ளக்காதலி சத்யாவுக்கும் அரிவாளல் வெட்டு விழுந்தது. இருவரும் ரத்த வெள்ளத்தில் சரிந்து கீழே விழுந்தனர். இதனையடுத்து சத்யாவின் பெற்றோர் மற்றும் உடன் வந்தவர்கள் வீட்டின் வெளிபுறத்தில் பூட்டு போட்டு பூட்டிவிட்டு தப்பிச் சென்றனர்.
இதற்கிடையே அலறல் சத்தம் கேட்டு சந்தேகம் அடைந்த அக்கம், பக்கத்தினர் திருவள்ளூர் தாலுகா போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். பொதுமக்கள் சிலரும் அங்கு திரண்டு வந்தனர்.
தகவல் அறிந்த போலீஸ் டிஎஸ்பி சந்திரகாசன், இன்ஸ்பெக்டர் சோபனாதேவி, சப்- இன்ஸ்பெக்டர் தேவேந்திரன் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர்.
வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு வக்கீல் வெங்கடேசன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். சத்யா உயிருக்கு போராடிய நிலையில் இருந்தார்.சத்யாவை திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பினர்.
பிரேத பரிசோதனைக்கு வெங்கடேசன் உடலும் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த கொலை சம்பந்தமாக சத்யாவின் தந்தை சங்கர், தாய் செல்லம்மாள், தம்பி வினோத் உள்பட 6 பேரை போலீசார் பிடித்துள்ளனர். அவர்களிடம் வெள்ளவேடு போலீஸ் நிலையத்தில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
வக்கீல் வெங்கடேசன் திருமணமானவர் அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். அதுபோல சத்யாவுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.