புதுப்பொலிவு பெறும் திருவள்ளூர் ரயில் நிலையம்
அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டத்தின் கீழ் ரயில் நிலையங்களின் உள்கட்டமைப்பு நவீன படுத்தப்பட்டு வருகிறது.;
சென்னையில் இருந்து அரக்கோணம், திருத்தணிக்கு செல்லும் புறநகர் மின்சார ரயில்கள் மற்றும் காட்பாடி, திருப்பதி, மும்பை, பெங்களூர் விரைவு ரயில்கள் என தினந்தோறும் சுமார் 200-க்கும் மேற்பட்ட ரயில்கள் திருவள்ளூர் ரயில் நிலையத்தில் நின்று செல்கின்றன.
திருவள்ளூர் மாவட்டத்தில் முக்கிய நகரமாக உள்ள திருவள்ளூரில் சிறப்பு பெற்ற வீரராகவப் பெருமாள் கோவில், விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில், ஆட்சியர் அலுவலகம், காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் அனைத்து அரசு அலுவலகங்களும் உள்ளன. இதனால் பள்ளி, கல்லூரிக்குச் செல்லும் மாணவ மாணவிகள், அரசு அலுவலர்கள், வியாபாரிகள், வேலைக்குச் செல்லும் பெண்கள், ஆண்கள் என ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் திருவள்ளூர் ரயில் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர்.
இந்தநிலையில் அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டத்தின் கீழ் தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டத்தில் உள்ள ரயில் நிலையங்களை மறுவடிவமைப்பு செய்து அதிநவீன ரயில் நிலையங்களாக மாற்ற தெற்கு ரயில்வே திட்டமிட்டு உள்ளது.
இதில்முதல் கட்டமாக 15 ரயில் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த திட்டத்தில் ரயில் நிலையங்களின் உள்கட்டமைப்பு நவீன படுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் சென்னை சென்ட்ரல்–அரக்கோணம் கோட்டத்தில் திருவள்ளூர் ரயில் நிலையம் ரூ.28.82 கோடியில் மறு சீரமைப்பு பணி கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது.
இதில் புதிய ரயில் நிலையக் கட்டிடம், நடை மேடைகளின் தரை மற்றும் கூரை சீரமைப்பு, ரயில் நிலையம் அருகே இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடங்கள் சீரமைக்கப்படும் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. பணிகள் அனைத்தையும் இந்த நிதியாண்டின் இறுதிக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ரயில் நிலையத்தில் நகரும் படிக்கட்டு மற்றும் லிப்ட் வசதி, 12 மீட்டர் அகலம்கொண்ட பயணிகள் நடைமேம்பாலம் வருகிறது. மேலும் நடைமேடைகளிலும் பயணிகள் நடமாடும் இடங்களிலும் பயனுள்ள தகவல் அளிக்க திரைகள், கண்காணிப்பு கேமரா அமைப்பது என பல்வேறு நடவடிக்கைகளை ரயில்வே நிர்வாகம் மேற்கொள்ள உள்ளது.
இதற்கிடையே சீரமைப்பு பணிகாரணமாக ரயில் நிலைய முகப்பு வழியாக பயணிகளை அனுமதிக்க வில்லை. சுரங்கப்பாதை வழியாக சென்று வருகிறார்கள். மேலும் பயணச் சீட்டு வழங்கும் இடம் நடை மேடை 1-ல் உள்ளது. அங்கும் பணிகள் நடை பெற்று வருவதால் பயண சீட்டை வாங்க பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே ரயில்நிலைய சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.