பல்லடத்தில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம் முற்றுகை
பல்லடத்தில், மாசு கட்டுப்பாடு வாரிய அலுவலகத்தை, பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
திருப்பூர் மாவட்டம், உடுமலை தாலுகா பெரியபட்டி, அப்பிலியபட்டி ஆகிய கிராமங்களில், கரித்தொட்டி ஆலைகள் இயங்கி வருகின்றன. இவற்றால், கடும் மாசு ஏற்பட்டு வருவதாக கூறி, விவசாயிகள், பல்லடத்தில் உள்ள திருப்பூர் தெற்கு மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
விவசாயிகள் கூறியதாவது: கரி தொட்டியில் தேங்காய் தொட்டிகளை எரிப்பதால் வெளியேறும் கரி துகள்கள் காற்றில் கலந்து மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. விளை நிலங்கள், பயிர்கள் மற்றும் நீரில் கலந்து, விவசாயம், கால்நடை வளர்ப்புத் தொழில் கடுமையாக பாதிக்கப்படுகிறது.
நிலத்தடி நீர் மாசடைந்ததால், 10 கி.மீ., துாரம் சென்று தண்ணீர் வாங்கி பயன்படுத்தி வருகிறோம். அதிகாரிகள், கண்துடைப்புக்காக ஆய்வு செய்வதை தவிர்த்து விட்டு, விவசாயிகளை காப்பாற்றும் முயற்சியில் இறங்க வேண்டும். சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தும் ஆலைகளை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.