தூய்மைப்பணியாளர்களுக்கு கொரோனா எதிர்ப்பு மருந்து: அசத்தும் பல்லடம் நகராட்சி!

திருப்பூர் மாவட்டம், பல்லடம் நகராட்சி பணியாளர்களுக்கு, கொரோனா நோய் எதிர்ப்பு மருந்து வழங்கப்பட்டது.

Update: 2021-06-12 14:18 GMT

பல்லடம் நகராட்சி சார்பில், கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி தரும் கபசுரக்குடிநீர் உள்ளிட்ட பொருட்கள் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டன.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சியில் 200,க்கும் மேற்பட்ட தூய்மைப்பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். கொரோனா ஊரடங்கு நேரத்தில், வீதிவீதியாக தூய்மைப்பணியில் ஈடுபடுவதுடன், கொரோனா தடுப்பு பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

தூய்மைப்பணியாளர்களை சிறப்பு படுத்தும் வகையில், அவர்களுக்கு சிறப்பு யோகா பயிற்சி மற்றும் கொரோனா நோய் எதிர்ப்பு மருந்து வழங்கும் நிகழ்ச்சி, பல்லடம் பஸ் ஸ்டாண்ட் அருகே நடந்தது. இதற்கு, பல்லடம் நகராட்சி ஆணையாளர் கணேசன் தலைமை வகித்தார். சுகாதார ஆய்வாளர் சிவக்குமார் வரவேற்றார்.

பொங்கலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய இயற்கை மருத்துவர் டாக்டர் தனலட்சுமி, யோகா பயிற்சி அளித்தார். பயிற்சியில் 15, வகையான யோகாசனங்கள் செய்து விளக்கம் தரப்பட்டது. அதைத்தொடர்ந்து நோய் எதிர்ப்பு சக்தி தரும் மாத்திரைகள், கபசுரகுடிநீர், முருங்கை சூப், நெல்லிக்காய் சூப்பொடி உள்ளிட்டவை வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் வருவாய் ஆய்வாளர் பிரகாஷ், மேற்பார்வையாளர் நாராயணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News