விவசாயம் சம்பந்தப்பட்ட பல்வேறு கோரிக்கைகள் அமைச்சரிடம் வலியுறுத்தல்

தமிழக விவசாயிகள்பாதுகாப்பு சங்கம் சார்பில் அமைச்சர் சாமிநாதனிடம் விவசாயம் சம்பந்தப்பட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

Update: 2021-06-28 05:16 GMT

தமிழக விவசாயிகள்பாதுகாப்பு சங்கம் சார்பில் அமைச்சர் சாமிநாதனிடம் கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் மற்றும் துறை செயலாளர்களை சந்தித்து உழவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தினர்.

தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் கொள்முதல் செய்து விற்பனை செய்யப்பட வேண்டும்,  விவசாய சங்க நிர்வாகிகளை உள்ளடக்கிய வேளாண் உயர்மட்டக்குழு ஏற்படுத்தப்பட வேண்டும். கள் இறக்க அனுமதிக்க வேண்டும்.நெல்லுக்கு குவிண்டாலுக்கு 2500, கரும்பு டன்னுக்கு 4000 குறைந்த பட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.

தமிழகம் முழுவதும் ஹைட்ரோகார்பன், மீத்தேன், ஷெல்கேஸ் எடுக்க தடை செய்ய வேண்டும். வேளாண்மை துறையில் உணவுப் பொருட்களை மதிப்பு கூட்டுதல், ஏற்றுமதி, சந்தைபடுத்துதல் ஆகிய பிரிவுகளுக்கு தனி பிரிவு ஏற்படுத்த வேண்டும்.

மூலிகை தாவரங்கள் பிரிவை மண்டல அளவில் கோவை, திருச்சி, சேலம், மதுரை, திருநெல்வேலி, கடலூர் ஆகிய இடங்களில் ஏற்படுத்த வேண்டும்.காய்கறிகளுக்கு தனியாக கூட்டுறவு சங்கங்களை ஏற்படுத்த வேண்டும். 

கூட்டுறவு பயிர் கடன் தள்ளுபடியில் உடனடியாக பயன்பெற்ற அனைவருக்கும் கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்க வேண்டும். தற்போது நிறுத்தப்பட்டுள்ள பயிர்க் கடன்களை   உடனடியாக வழங்க வேண்டும். 

வனவிலங்குகள் சேதப்படுத்தும் பயிர்கள் மற்றும் மரங்களுக்கு நிலம் எடுப்பிற்கு அளிக்கப்படுவதை போல் அதிகபட்ச இழப்பீடு சந்தை மதிப்பில் அளிக்கப்பட வேண்டும். காட்டுப்பன்றி, மயில் உள்ளிட்ட உயிரினங்களை தொல்லை தரும் விலங்குகளாக அறிவித்து, ஏற்கனவே ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம் மாநிலங்களில் அறிவியல் பூர்வமாக வேட்டையாட அனுமதித்துள்ளது போல் தமிழகத்தில் அனுமதிக்க வேண்டும்.

வனத்துறை சார்பில் மரங்களுக்கு மிகக்குறைந்த இழப்பீடு நிர்ணயம் செய்யப்படுவதை தவிர்த்து சந்தை மதிப்பில் நிர்ணயம் செய்து வழங்க வேண்டும். கெயில்/ IDPL திட்டங்களை சாலையோரமாக நிறைவேற்ற வேண்டும். 

இனாம் நிலங்களை உழுது கொண்டிருக்கும் உழவர்களுக்கு உரிமை பட்டா வழங்க வேண்டும். உயர்மின் கோபுரங்கள் அமைக்கப்பட்ட பிரச்சினையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு சம்பந்தமாக பேசுவதற்கு குழு அமைக்கப்பட வேண்டும், 100 சதவீத ஆதார தொகை, அரசாணை எண் 54 அமலாக்கம், கிணறு, ஆழ்குழாய் கிணறு, உள்ளிட்ட கட்டுமானங்களுக்கு முழு இழப்பீடு, மாத வாடகை, போராட்ட வழக்குகளை திரும்பப் பெறுதல், விருதுநகர் முதல் திருப்பூர் வரையிலான 765 கிலோவாட் திட்டப்பணிகளை வழக்குகள் முடியும் நிறுத்திவைப்பது, புதைவடங்கள் அமைப்பதை மாநில அரசு கொள்கை முடிவாக எடுத்து அறிவிப்பு செய்ய வேண்டும்.

24 மணி நேரமும் உழவர்களுக்கு தடையற்ற மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும், வேளாண் இலவச மின் இணைப்புகளுக்காக முன்பதிவு செய்து காத்திருக்கும் அனைத்து உழவர்களுக்கும் உடனடியாக இலவச மின் இணைப்புகள் அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

Tags:    

Similar News