சிவன்மலை ஆண்டவன் உத்தரவு பெட்டியில் ஒரு படி நெல் வைத்து பூஜை
திருப்பூர் மாவட்டம், சிவன்மலை ஆண்டவன் உத்தரவு பெட்டியில் ஒரு படி நெல் வைத்து பூஜை செய்யப்பட்டது.
தமிழகத்தில் வேறு எங்கும் இல்லாத வகையில், திருப்பூர் மாவட்டம் சிவன்மலை முருகன் கோயிலில் 'ஆண்டவன் உத்தரவு' என்ற பெயரில் ஏதேனும் ஒரு பொருளை வைத்து சிறப்புப் பூஜைசெய்து வழிபடுவது வழக்கம்.
பின்னர் அந்த பொருளை கோயில் மூலவர் அறைக்கு முன்பாக கல்தூணில் உள்ள கண்ணாடி பெட்டிக்குள் வைத்து பக்தர்களின் பார்வைக்கு வைப்பார்கள். இதனை தரிசித்து வழிபட பல்வேறு பகுதியில் இருந்தும் பக்தர்கள் கோயிலுக்கு வந்து செல்வார்கள்.
மேலும், கண்ணாடி பெட்டிக்குள் என்ன பொருள் வைக்க வேண்டும் என்பதை பக்தரின் கனவில் ஆண்டவன் தெரிவிப்பதாக நம்பப்படுகிறது. இது 'ஆண்டவன் உத்தரவு பெட்டி' என்று அழைக்கப்படுகிறது. கண்ணாடி பெட்டிக்குள் வைக்கப்படும் பொருளுக்கு காலநிர்ணயம் எதுவும் கிடையாது. வேறொரு பக்தரின் கனவில் வந்து அடுத்த பொருளை வைக்கும் வரை, அதே பொருள் வைக்கபட்டு பூஜை நடைபெறும். இந்நிலையில் இன்று ஒரு படி நெல் வைத்து பூஜை செய்தனர்.