திருப்பூர்: காங்கயம் அருகே வயதான தம்பதி கொலை - பரபரப்பு
திருப்பூர் மாவட்டம், காங்கயம் அருகே வயதான தம்பதி கொலை செய்யப்பட்டது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.;
திருப்பூர் மாவட்டம், காங்கயம் அருகே தம்மரெட்டிபாளையம் ரங்காம்பாளையத்தை சேர்ந்த பழனிசாமி,72. இவரது மனைவி வள்ளியம்மாள்,68, வயதான தம்பதியினருக்கு சந்திரசேகர் என்ற மகனும், மேகலா என்ற மகளும் உள்ளனர். இதில், சந்திரசேகர், திருப்பூரில் பனியன் கம்பனி நடத்தி வருகிறார். மேகலா திருமணமாகி நத்தகாடையூரில் வசிக்கிறார். பழனிசாமியும், வள்ளியம்மாளும், அவர்களின் 20 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வந்துள்ளனர். மேலும், 2 பசு மாடுகள் வளர்த்து, பால் கறந்து விற்பனை செய்கின்றனர்.
இந்நிலையில் இன்று அதிகாலை 5 மணி அளவில், பால் வாங்கும் நபர் வந்தபோது, பால் கேன் இல்லாமல் இருந்தது. இதனால், வீட்டுக்கு சென்று பார்த்தபோது, பழனிசாமியும், வள்ளியம்மாளும் கொலை செய்யப்பட்டு கிடந்தனர். தகவல் அறிந்த திருப்பூர் எஸ்பி. சசாங்க் சாய், காங்கயம் டிஎஸ் குமரேசன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர்.
போலீஸ் விசாரணையில், வள்ளியம்மாள் கழுத்தில் கிடந்த ஏழரை பவுன் தாலிக்கொடி பறிக்கப்பட்டு இருந்தது. காதில் இருந்த கம்மல் அப்படியே இருந்தது. கொலை செய்யப்பட்ட இருவரின் உடல்களும் மீட்கப்பட்டு, திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கொலை செய்யப்பட்ட இடத்திற்கு மோப்ப நாய் வரழைக்கப்பட்டது. தடயவியல் நிபுணர்கள், தடயங்களை சேகரித்தனர். வயதான தம்பதியினர் கொலை செய்யப்பட்ட சம்பவம் காங்கயம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.