தடுப்பூசி டோக்கனில் குளறுபடி: திருப்பூரில் 2 இடங்களில் பொதுமக்கள் மறியல்!
திருப்பூரில், தடுப்பூசி போடக்கோரியும் டோக்கன் குளறுபடிகளை தீர்க்க வலியுறுத்தியும், பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாவட்டத்தில், தட்டுப்பாடு காரணமாக கடந்த சில நாட்களாக தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டு இருந்தது. அண்மையில் மாவட்டத்திற்கு 16 ஆயிரம் 500 தடுப்பூசி ஒதுக்கீடு செய்யப்பட்டதை தொடர்ந்து, மீண்டும் கடந்த இரண்டு நாட்களாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
தடுப்பூசி செலுத்தி கொள்ளும் மையங்களில், அதிகாலை முதலே ஏராளமான பொதுமக்கள் அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசிப்போட வரிசையில் வந்து காத்திருக்கின்றனர். அவர்களுக்கு டோக்கன் அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. ஆனால், ஒருசில இடங்களில் டோக்கன் பெற்றவர்களுக்கு தடுப்பூசி போடாமல், முக்கிய பிரமுகர்களுக்கு தடுப்பூசி போடுவதாக புகார்கள் எழுந்தன.
திருப்பூர் 15 வேலம்பாளையம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் தடுப்பூசி போட்டுக்கொள்ள, இன்று காலையிலேயே மக்கள் வந்து வரிசையில் காத்திருந்தனர். ஆனால், தடுப்பூசி வரவில்லை என சுகாதாரத்துறையினர் திடீரென அறிவித்தால், அவர்கள் ஆவேசமடைந்தனர். இதை கண்டித்து, பொதுமக்கள் அந்த பகுதியில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இதேபோல், ஊத்துக்குளி அரசு மருத்துவமனையில், வரிசையில் இருந்தவர்களுக்கு டோக்கன் வழங்காமல், குறுக்கு வழியில் சிலருக்கு டோக்கன் கொடுத்ததோடு, தடுப்பூசி போட்டதாக கூறப்படுகிறது. இதனால் கொந்தளித்த பொதுமக்கள், ஊத்துக்குளி ரோட்டில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அதிகாரிகள் வந்து பொதுமக்களை சமாதானம் செய்து அனுப்பிவைத்தனர். இத்தகைய மறியல்கள் தொடர்வது, திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.